December Release Movies
2024-ம் இப்போ தான் ஆரம்பித்தது போல இருந்த நிலையில், அதற்குள் முடிவடைய உள்ளது. இந்த ஆண்டு முதல் பாதி தமிழ் சினிமாவுக்கு சோதனைக் காலமாக இருந்தாலும், அதன் இரண்டாம் பாதியில் பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. தற்போது 2024-ம் ஆண்டு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த வருடத்தின் கடைசி மாதமான டிசம்பரில் என்னென்ன படங்கள் ரிலீஸ் ஆகிறது என்பதை பார்க்கலாம்.
Pushpa 2
புஷ்பா 2
டிசம்பர் மாதம் பிரம்மாண்ட படத்துடன் ஆரம்பமாக உள்ளது. இம்மாதம் 5-ந் தேதி அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி இருக்கும் புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் திரைக்கு வர உள்ளது. பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ள இதை சுகுமார் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத், தமன், சாம் சி.எஸ் ஆகியோர் இசையமைத்து உள்ளனர். இப்படத்தை தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
Soodhu Kavvum 2
சூது கவ்வும் 2
நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் சூது கவ்வும். இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி இருக்கிறது. இப்படத்தில் அகில உலக சூப்பர்ஸ்டார் சிவா ஹீரோவாக நடித்துள்ளார். அர்ஜுன் என்கிற புதுமுக இயக்குனர் இப்படத்தை இயக்கி உள்ளார். மிர்ச்சி சிவா உடன் ராதா ரவி, எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், அருள்தாஸ் ஆகியோர் நடித்துள்ள இப்படம் வருகிற டிசம்பர் 13-ந் தேதி திரைக்கு வர உள்ளது.
இதையும் படியுங்கள்... ஆளவிடுங்கடா சாமி! எக்ஸ் தளத்தில் இருந்து எஸ்கேப் ஆன விக்னேஷ் சிவன் - காரணம் என்ன?
Viduthalai part 2
விடுதலை 2
டிசம்பரில் ரிலீசுக்காக காத்திருக்கும் மற்றொரு படம் விடுதலை 2. கடந்த ஆண்டு இப்படத்தின் முதல் பாகம் ரிலீஸ் ஆகி மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில், அதன் இரண்டாம் பாகத்தை வருகிற டிசம்பர் 20ந் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர். வெற்றிமாறன் இயக்கியுள்ள இப்படத்தில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், சேத்தன், கெளதம் மேனன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
Baby John
பேபி ஜான்
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ரிலீஸ் ஆக உள்ள படம் தான் பேபி ஜான். இது இந்தி படமாகும். தமிழில் விஜய் நடித்த தெறி படத்தின் ரீமேக் தான் இந்த பேபி ஜான். இப்படத்தை அட்லீ தயாரித்துள்ளார். இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுக்க உள்ளார் கீர்த்தி சுரேஷ். இப்படத்தில் நாயகனாக வருண் தவான் நடித்துள்ளார். இப்படம் டிசம்பர் கடைசி வாரத்தில் ரிலீசாக உள்ளது.
இதையும் படியுங்கள்... என்னால தான் நயன்தாரா விக்னேஷ் சிவன் காதல் ஒர்க் அவுட்டாச்சு – நடிகர் சிவா அதிர்ச்சி தகவல்!