விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்த நடிகர் விமல் கடந்த 2009-ம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான பசங்க படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதையடுத்து கேடி பில்லா கில்லாடி ரங்கா, களவாணி, கலகலப்பு, வாகை சூடவா என தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்ததன் மூலம் பேமஸ் ஆனார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான விலங்கு என்கிற வெப் தொடர் ஓடிடி-யில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. இதுதவிர ஏராளமான படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகர் விமல் மீது சினிமா தயாரிப்பாளர் ஒருவர் கமிஷனர் அலுவலகத்தில் மோசடி புகார் கொடுத்துள்ள சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பெரவள்ளூரைச் சேர்ந்த கோபி என்கிற சினிமா தயாரிப்பாளர் விமல் மீது கொடுத்துள்ள புகார் மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது : களவாணி, களவாணி 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நடிகர் விமல், மன்னர் வகையறா படத்தை எடுத்தபோது என்னிடம் 5 கோடி ரூபாய் கடனாக வாங்கினார். மேலும் அந்தப் படத்தின் மூலம் வரும் லாபத்திலும் பங்கு தருவதாக என்னிடம் தெரிவித்தார். ஆனால், என்னிடம் வங்கிய கடன் தொகை ரூ.5 கோடியை நடிகர் விமல் இதுவரை திருப்பித்தரவில்லை.
அவர் தற்போது பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஆனால் எனக்கு தரவேண்டிய 5 கோடி ரூபாய் பணத்தை திருப்பித்தராமல் மோசடி செய்து வருகிறார். பணத்தை கேட்டால் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். எனவே நடிகர் விமல் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து, அவர் எனக்கு தரவேண்டிய 5 கோடி ரூபாய் பணத்தை வசூலித்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்” என அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... Prabhas : ரூ.100 கோடிக்கு மேல் நஷ்டம்... ராதே ஷ்யாம் படுதோல்வி அடைந்தது ஏன்? - நடிகர் பிரபாஸ் விளக்கம்