கோமாளி படத்தின் வெற்றிக்கு பின்னர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ரிலீசாகி உள்ள திரைப்படம் லவ் டுடே. இப்படத்தின் மூலம் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாகவும் அறிமுகமாகி உள்ளார். கோலிவுட்டில் தற்போது திரும்பிய பக்கமெல்லாம் லவ் டுடே படத்தின் வெற்றியைப் பற்றிய பேச்சு தான். அந்த அளவுக்கு திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது இப்படம்.
இந்த படத்தில் நிறைய புதுமுகங்கள் தான் நடித்திருந்தனர். அப்படி இருந்தும் இப்படம் இந்த அளவுக்கு பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதுக்கு காரணம் அப்படத்தின் கண்டெட் தான். இன்றைய காலகட்டத்தில் ஒரு காதல் ஜோடி தங்களது செல்போனை மாற்றிக்கொண்டால் என்ன ஆகும் என்பதை அப்படியே எதார்த்தமாகவும், காமெடியாகவும் கண்முன் கொண்டு வந்ததே இப்படத்தின் ஸ்பெஷல்.
இப்படத்தை இளைஞர்கள் அதிகளவில் கொண்டாடுவதற்கு காரணம் இதில் உள்ள நிறைய காட்சிகள் அவர்களது நிஜ வாழ்க்கையில் கனெக்ட் செய்துகொள்ளும் படி இருந்தது. அதுமட்டுமின்றி யுவன் சங்கர் ராஜாவின் இசை, இப்படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. குறிப்பாக அவர் குரலில் பாடிய ‘என்னைவிட்டு நீ போனாலும்’ என்கிற பாடல் படத்தில் இடம்பெறாமல் இருந்தாலும், தற்போது யூடியூபில் வெளியாகி செம்ம டிரெண்டாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... 103 வயதிலும் ஆரோக்கியமாக இருக்கும் தளபதி விஜய்யின் பாட்டி..! வைரலாகும் புகைப்படம்..!
வெறும் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஏஜிஎஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட லவ் டுடே திரைப்படம் தற்போது பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி வருகிறது. இப்படம் தற்போது வரை தமிழ்நாட்டில் மட்டும் ரூ.55 கோடி வசூலித்து உள்ளது. அதேபோல் உலகளவில் மொத்தமாக ரூ.70 கோடிக்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
சிம்பு, சிவகார்த்திகேயன், தனுஷ், விக்ரம் என தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்கள் நடிப்பில் இந்த ஆண்டு ரிலீசான படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்து வரும் லவ் டுடே திரைப்படம் விரைவில் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இப்படம் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு நாளை தான் ரிலீசாக உள்ளது.