
'லவ் டுடே' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள படம் டிராகன். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர் ஆகியோர் நடித்துள்ளனர். காதல் பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி உள்ள டிராகன் படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கி உள்ளார். இப்படம் 'லவ் டுடே' அளவிற்கு ஒர்க் அவுட் ஆகி உள்ளதா? இதில் இயக்குனர் காட்ட விரும்பிய புதிய விஷயம் என்ன போன்றவற்றை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
கதைக்களம்
ராகவனாக பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். டிராகன் என்பது அவரது இன்னொரு பெயர். அவர் பள்ளியில் 96% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றாலும், அவர் விரும்பிய பெண்ணுக்கு ப்ரொபோஸ் செய்தால், அவளோ இவரின் காதலுக்கு நோ சொல்லிவிடுகிறாள். அதற்கு அவள் சொன்ன காரணம்.. தனக்கு கெட்ட பையன்கள் என்றால் தான் பிடிக்குமாம். இதனால் கெட்ட பையனாக மாற வேண்டுமென்று பி.டெக்கில் வேண்டுமென்றே 48 பாடங்களில் அரியர் வைக்கிறான் நாயகன். அதனால் முழுவதுமாக காலியாக இருக்கிறான். கல்லூரியில் அவனை விரும்பிய கீர்த்தி (அனுபமா பரமேஸ்வரன்) உன்னைப் போல் வேலையில்லாத, வருமானமில்லாத ஒருவரை நான் ஏன் விரும்ப வேண்டும் என்று பிரேக்கப் சொல்கிறாள்.
எப்படியாவது வேலை வாங்க வேண்டுமென்று போலி சான்றிதழ்களை வைத்து சாஃப்ட்வேர் வேலை வாங்குகிறார் ஹீரோ. அதன் பிறகு வாழ்க்கையில் செட்டில் ஆகி கார், வீடு போன்றவற்றை வாங்க ஆரம்பிக்கிறான். இந்த சூழ்நிலையில் அவனுக்கு ஒரு பெரிய சம்பந்தம் வருகிறது. பல்லவி (காயாத்) உடன் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... டிராகன் படம் எப்படி இருக்கு? ரிலீசாகும் முன்னரே படம் பார்த்து முதல் விமர்சனம் சொன்ன சிம்பு
இன்னும் ஆறு மாதங்களில் திருமணம், அமெரிக்கா சென்று செட்டில் ஆகிவிட வேண்டும் என்று நினைக்கும் நேரத்தில் ராகவனின் கல்லூரி முதல்வர் (மிஷ்கின்) வடிவில் ஒரு திருப்பம் ஏற்படுகிறது. அவருக்கு டிராகன் போலி சான்றிதழ்களுடன் வேலை செய்யும் விஷயம் தெரிகிறது.
அதனால் டிராகனின் போலி சான்றிதழ் மேட்டரை பற்றி அவன் வேலை செய்யும் கம்பெனியில் போட்டுக்கொடுப்பேன் என மிரட்டுகிறார் மிஷ்கின், காலில் விழுந்து கெஞ்சியும் அவர் மனம் மாறவில்லை. இப்படியான நிலையில் டிராகனுக்கு ஒரு நிபந்தனை விதிக்கிறார் மிஷ்கின். அது என்னவென்றால் மூன்று மாதங்கள் கல்லூரிக்கு வந்து தேர்வு எழுதி 48 அரியர்களையும் கிளியர் செய்ய வேண்டும் என்கிற நிபந்தனை விதிக்கிறார். அதனால் வேறு வழியில்லாமல் மீண்டும் கல்லூரிக்கு செல்ல ஆரம்பிக்கிறான் டிராகன், அப்போது என்ன நடந்தது? மீண்டும் கீர்த்தி அவன் வாழ்க்கையில் வந்தாளா? கடைசியில் என்ன ஆனது? என்பதை மீதிக்கதை.
விமர்சனம்
பிரதீப் ரங்கநாதன் 'லவ் டுடே' திரைப்படத்தில் ஹீரோ ஹீரோயின் இருவரும் ஒருவருக்கொருவர் 'போன்களை மாற்றிக் கொள்வது' என்ற விஷயம் ஹைலைட். செல் போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் இந்த திரைப்படத்தை பார்க்க ஆர்வம் காட்டினார்கள். ஆனால் இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக முயற்சி செய்துள்ளார். அதே போல் தன்னை நம்பி வரும் இளைஞர்களை மிஸ் செய்யக் கூடாது என்று உறுதியாக நம்பி அதே போல் கதையை தேர்வு செய்துள்ளார். ஒரு விதத்தில் கதையில் தனது இலக்கு பார்வையாளர்களின் இடத்தை இணைத்துள்ளார்.
அதே போல் இந்த திரைப்படத்தில் வரும் சில காட்சிகள் இதற்கு முன்பு பார்த்தது போல் தோன்றினாலும் கதைக்களம் புதிது. போலி செய்து வாழ்க்கையில் முன்னேறி, அது தவறு என்று புரிந்து கொண்டு, அவற்றை சரி செய்யும் செயல்பாட்டில் வரும் கஷ்டங்கள் சுவாரஸ்யமாக இருக்கிறது. இப்போது சமூகம் போலிகளுக்கு கொடுக்கும் மதிப்பை, நேர்மைக்கு கொடுப்பதில்லை என்கிற மெசேஜையும் சொல்லி இருக்கிறார்கள். முதல் பாதியில் கதையில் திருப்பங்கள் இருந்தாலும் சில இடங்களில் மெதுவாக நகர்கிறது. ஆனால் இரண்டாம் பாதிக்கு வரும்போது எதிர்பாராத ஒரு சிக்கலுடன் கதைக்குள் இழுத்துச் செல்கிறார்கள். அதனால் முதல் பாதி ஓகே ரகமாக இருந்தாலும், இரண்டாம் பாதி வேறலெவலில் எடுத்து பாஸ் ஆகி இருக்கிறது இந்த டிராகன்.
ஓ மை கடவுளே இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இந்த திரைப்படத்தை நல்ல மெசேஜுடன் கூடிய சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக இதை கொடுத்துள்ளார். முதல் பாதியை இன்னும் கொஞ்சம் நன்றாக மெருகேற்றி இருக்கலாம். பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் லியோன் ஜேம்ஸ் மிரட்டி இருக்கிறார். ஒளிப்பதிவு ஒவ்வொரு காட்சியையும் வண்ணமயமாக காட்சிப்படுத்தி உள்ளனர்.
பிரதீப் ரங்கநாதன் தனது கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார். லவ் டுடேவில் உள்ள அதே எனர்ஜியோடு நடித்துள்ளார். அதே போல் அனுபமா திரைப்படத்திற்கு வலு சேர்த்துள்ளார். கயாடு லோஹர், மிஷ்கின், கே.எஸ்.ரவிக்குமார், கௌதம் மேனன், மிஷ்கின் போன்ற சீனியர்கள் தங்கள் கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.
பிளஸ் பாயிண்ட்ஸ்
* புதிய கதைக்களம், இளைஞர்களை இலக்காக கொண்ட காட்சிகள்
* பிரதீப் ரங்கநாதன்
* வசனங்கள்
* மிஷ்கின் நடிப்பு
மைனஸ் பாயிண்ட்ஸ்
* இதற்கு முன்பு பார்த்தது போல் தோன்றும் கல்லூரி காட்சிகள்
* மெதுவாக நகரும் முதல் பாதி
இதையும் படியுங்கள்... முன்பதிவிலேயே தனுஷ் படத்தைவிட டபுள் மடங்கு வசூல்; மாஸ் காட்டும் டிராகன்!