நடிகரும், ஆந்திர பிரதேச மாநிலத்தின் துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் ஹீரோவாக நடித்துள்ள படம் ஹரி ஹர வீர மல்லு. இப்படத்தை ஜோதி கிருஷ்ணா இயக்கியுள்ளார், மேலும் ராதா கிருஷ்ண ஜகர்லமுடு, சாய் மாதவ் புர்ரா மற்றும் அபிமன்யு ஸ்ரீவஸ்தவா ஆகியோர் எழுதியுள்ளனர்.
கோஹினூர் வைரத்தைப் பற்றிய சரித்திர கதையம்சம் கொண்ட இப்படத்தில் நடிகர் பவன் கல்யாண் 'ஹரி ஹரா வீர மல்லு' என்கிற போர்வீரன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நேற்று பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது.
24
ஹரி ஹர வீர மல்லு
பவன் கல்யாண் நடிப்பில் கடைசியாக ப்ரோ என்கிற திரைப்படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரிலீஸ் ஆனது. அதன்பின் அவர் நடிப்பில் எந்த படமும் ரிலீஸ் ஆகாத நிலையில், சுமார் இரண்டு வருட காத்திருப்புக்கு பின்னர் ஹரி ஹர வீர மல்லு படம் மூலம் ரசிகர்களை மகிழ்விக்க வந்துள்ளார் பவன் கல்யாண். இப்படம் நேற்று ரிலீஸ் ஆன நிலையில், இதனை அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், திரையரங்கு முன் ஆடிப் பாடி கொண்டாடினர். இப்படத்தின் ப்ரீமியர் காட்சிகள் கடந்த ஜூலை 23-ந் தேதி இரவு திரையிடப்பட்டது. அதற்காக ஒரு டிக்கெட் ரூ.600க்கு விற்பனை செய்யப்பட்டது.
34
பவன் கல்யாண் படத்திற்கு வரவேற்பு எப்படி உள்ளது?
ஹரி ஹர வீர மல்லு திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஆஸ்கர் விருது மற்றும் கோல்டன் குளோப் போன்ற பெருமைமிக்க விருதுகளை வென்ற எம்.எம். கீரவாணி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை ஏ. தயாகர் ராவ் தயாரித்துள்ளார், மேலும் ஏ.எம். ரத்னம் வழங்குகிறார். இப்படத்தில் நடிகர் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன ஹரி ஹர வீர மல்லு திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இப்படம் இணையத்தில் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஹரி ஹர வீர மல்லு திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி இருக்கிறது. அதன்படி இப்படம் முதல் நாளில் ரூ.44.2 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் ப்ரீமியர் ஷோ மூலம் ரூ.12.7 கோடியும், நேற்று இந்திய அளவில் ரூ.31.5 கோடி வசூலித்திருக்கிறது. கடைசியாக வெளிவந்த பவன் கல்யாணின் ப்ரோ திரைப்படம் முதல்நாளில் 30 கோடியும், பீம்லா நாயக் திரைப்படம் ரூ.37.12 கோடியும், வக்கீல் சாப் திரைப்படம் ரூ.40 கோடியும் வசூலித்திருந்தது. அதோடு ஒப்பிடுகையில் ஹரி ஹர வீர மல்லு படம் ப்ரீமியர் ஷோவை தவிர்த்து பார்த்தால் 31.5 கோடி மட்டுமே வசூலித்திருக்கிறது. நெகடிவ் விமர்சனங்களே இப்படத்தின் வசூல் சரிவுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.