
மிமிக்ரி கலைஞராக விஜய் டிவிக்குள் நுழைந்து, கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று அதில் வெற்றிபெற்ற சிவகார்த்திகேயன். அடுத்ததாக நடன நிகழ்ச்சியிலும் தன்னுடையை திறமையை நிரூபித்துக் காட்டினார். பின்னர் தொகுப்பாளராக களமிறங்கிய சிவகார்த்திகேயன் தன்னுடைய டைமிங் காமெடியால் மக்களை மகிழ்வித்து, அது இது எது, சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1 என பல்வேறு சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் தமிழ் மக்களின் மனதை கொள்ளைகொண்டார்.
படிப்படியாக நடிப்பின் பக்கம் தன் போகஸை திருப்பிய சிவகார்த்திகேயனுக்கு வழிகாட்டியாக இருந்த தனுஷ், தன்னுடைய 3 படத்தில் அவரை காமெடியனாக நடிக்க வைத்தார். அப்படத்தை தொடர்ந்து எதிர்நீச்சல் படத்தில் சிவகார்த்திகேயனை ஹீரோவாக நடிக்க வைத்த தனுஷ், அப்படத்தின் மூலம் அவருக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தார். சிவகார்த்திகேயனின் கெரியரில் அவர் முதல் வெற்றியை ருசித்த படம் எதிர்நீச்சல்.
எதிர்நீச்சல் ரிலீஸ் ஆன அதே ஆண்டு, சிவகார்த்திகேயனின் மற்றுமொரு மாஸ்டர் பீஸ் படமான வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரிலீஸ் ஆனது. பொன்ராம் இயக்கிய இப்படம் தமிழ் சினிமா ரசிகர்களை வயிறுகுலுங்க சிரிக்க வைத்ததோடு, சிவகார்த்திகேயனை பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆகவும் உயர்த்தியது. பின்னர் படிப்படியாக ஆக்ஷன் ஹீரோவாக உருவெடுத்த சிவகார்த்திகேயன் காக்கி சட்டை, மான் கராத்தே, ரெமோ என தன்னை அடுத்த லெவலுக்கு நகர்த்தி சென்றார்.
ஒருவர் முன்னேற வேண்டும் என்றால் அவர் வெற்றியை மட்டும் பார்த்திருக்க முடியாது, அதில் தோல்விகளையும் கடந்து வந்திருக்க வேண்டும். அப்படி சிவகார்த்திகேயனுக்கு ஹீரோ, மிஸ்டர் லோக்கல், சீமராஜா என அடுத்தடுத்த படங்கள் தோல்வியை சந்தித்த நிலையில், கடனிலும் சிக்கினார் எஸ்.கே. இதையடுத்து நம்ம வீட்டு பிள்ளை, டாக்டர் ஆகிய படங்கள் அவரை சரிவில் இருந்து மீட்டுக் கொண்டுவந்தன.
இதையும் படியுங்கள்... சிவகார்த்திகேயனின் SK 23 படத்தின் டைட்டில் இதுதானா? இதுவும் பழைய டைட்டில் ஆச்சே!
டாக்டர், டான் என அடுத்தடுத்து 2 படங்கள் 100 கோடி வசூலை எட்டிய நிலையில், பிரின்ஸ் படத்தின் படுதோல்வி சிவகார்த்திகேயனை மீண்டும் சோதித்தது. பின்னர் கதையில் கவனம் செலுத்த தொடங்கிய எஸ்.கே. மாவீரன் படம் மூலம் கம்பேக் கொடுத்து, அமரன் படத்தின் அதிரிபுதிரியான வெற்றி மூலம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தினார். அப்படம், ரூ.350 கோடி வசூலை வாரிக்குவித்தது.
இதன்மூலம் ரஜினி, விஜய், கமலுக்கு அடுத்தபடியாக கோலிவுட்டின் வசூல் சக்கரவர்த்தியாக மாறினார் சிவகார்த்திகேயன். தற்போது பராசக்தி படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்த வண்ணம் உள்ள நிலையில், அவரின் சொத்து மதிப்பு குறித்த விவரத்தை பார்க்கலாம்.
தற்போது ஒரு படத்துக்கு ரூ.50 கோடி வரை சம்பளம் வாங்கி வரும் சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு ரூ.150 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இவருக்கு சொந்தமாக சென்னையில் ஒரு பிரம்மாண்ட பங்களா உள்ளது. அதில் ஜிம், நீச்சல் குளம் என சகல வசதிகளும் உள்ளன. மேலும் அவரிடம் மினி கூப்பர், பென்ஸ், பிஎம்டபிள்யூ போன்ற சொகுசு கார்களும் உள்ளன. நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் ஜொலித்து வரும் சிவகார்த்திகேயன், அதன் மூலமாகவும் கோடி கோடியாக வருவாய் ஈட்டி வருகின்றார்.
இதையும் படியுங்கள்... 9 வருடங்களுக்கு பின் ரீ-ரிலீஸ் செய்யப்படும் சிவகார்த்திகேயனின் சூப்பர் ஹிட் படம்!