
இயக்குனர் அன்பு இயக்கத்தில் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ள ‘படை தலைவன்’ திரைப்படம் இன்று (ஜூன் 13) வெளியாகி உள்ளது. நேற்று இரவு சினிமா பிரபலங்களுக்கான செலிபிரிட்டி பீரிமியர் ஷோ திரையிடப்பட்டது. அதில் பல திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டு ‘படை தலைவன்’ படத்தை பார்த்து ரசித்தனர். படத்தைப் பார்த்த ராதாரவி, சரத்குமார், பிரேமலதா விஜயகாந்த் இயக்குனர் செல்வமணி உள்ளிட்ட பலர் படத்தை பாராட்டிப் பேசினர்.
பல மாதங்களுக்கு முன்பே படப்பிடிப்புகள் முடிந்த நிலையில், படத்தின் வெளியீடு சில காரணங்களால் தள்ளிக் கொண்டே சென்றது. இந்த நிலையில் இன்று தமிழகம் எங்கும் உள்ள 500 திரையரங்குகளில் படம் வெளியாகி உள்ளது. படம் குறித்து பாசிட்டிவ் விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. டீசர், டிரெய்லர் காட்சிகளைப் பார்த்தபோது ‘கும்கி’ படத்திற்குப் பிறகு யானைகளை வைத்து உருவான அருமையான படமாக இந்த படம் உருவாகி இருப்பதாக தெரிந்தது. இளையராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் யாமினி சந்தர் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தில் கேப்டன் விஜயகாந்த் ஏஐ தொழில்நுட்ப மூலம் மீண்டும் தோன்றியுள்ளார்.
படம் குறித்து பேசிய ராதாரவி, “நான் தமிழ் திரையுலகுக்கு வந்து 51 ஆண்டுகள் ஆகிவிட்டது. இத்தனை ஆண்டுகளில் முதல் முறை இது போல் ஒரு படத்தைப் பார்க்கிறேன். இந்த படத்தை பார்த்த பின்னர் நான் வியந்து போனேன். இந்த பையன் எவ்வளவு நல்லா நடிச்சி இருக்காரே என்று யோசிக்க வைத்துவிட்டார். சண்முக பாண்டியனைத் தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது என்கிற அளவிற்கு நடித்துள்ளார். இரண்டு, மூன்று முறை படத்தை கட்டாயம் தியேட்டருக்கு சென்று பார்ப்பேன். நீங்களும் தியேட்டர்களுக்கு சென்று படத்தை பார்த்துவிட்டு உங்களுடைய கருத்துக்களை சொல்ல வேண்டும்” எனக் கூறினார்.
இயக்குனர் செல்வமணி பேசும் பொழுது, “படை தலைவன் திரைப்படத்தை பார்க்கும் பொழுது மிகப்பிரமாண்டமாக இருக்கிறது. சண்முக பாண்டியனை திரையில் பார்ப்பதற்கு அப்படியே விஜயகாந்த் சாரை பார்ப்பது போலவே இருக்கிறது. அப்பாவுக்கு பையன் தப்பாமல் பிறந்திருக்கான். சண்டைக் காட்சிகளில் எல்லாம் விளையாடி இருக்கிறார். படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள். விஜயகாந்த் சார் திரையில் தோன்றும் காட்சிகளில் தியேட்டரே அதிர்ந்து விட்டது. கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிகள் இதுவரை வந்த தமிழ்ப் படங்களில் இது போல் வந்திருக்குமா? என்று தெரியவில்லை. அந்த அளவிற்கு பிரம்மாண்டமாக இருந்தது. கேப்டனின் அருள் எப்போதும் சண்முகப் பாண்டியனுக்கு இருக்கும் என்பதையே காட்டுகிறது” என்றார்.
படம் குறித்து பேசிய நடிகர் சரத்குமார், “கேப்டனை ஏஐ மூலம் பார்த்தபோது உணர்ச்சிகரமாக இருந்தது. சண்முக பாண்டியன் ஆக்ஷன் காட்சிகளில் தோன்றும்பொழுது நண்பர் விஜயகாந்தை மீண்டும் பார்ப்பது போல இருந்தது. இந்த கதை சமூகப் பொறுப்புடன், அதே சமயம் கடவுள் பெயரை வைத்து சிலர் ஏமாற்றுவதையும் சுட்டிக்காட்டுகிறது. படம் மிகச் சிறப்பாக உள்ளது. சண்முக பாண்டியன் உடன் இணைந்து நான் ஒரு படமும் நடித்துக் கொண்டிருக்கிறேன். அவருடைய வருங்கால திட்டங்கள் அனைத்திற்கும் என்னுடைய வாழ்த்துக்கள். விஜயகாந்த் போலவே அவரும் மிகப்பெரிய இடத்தை அடைய வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன்” என்று பேசினார்.
படம் குறித்து பேசிய விஜயகாந்தின் மனைவியும், சண்முக பாண்டியனின் தாயாருமான பிரேமலதா விஜயகாந்த், “ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது சிலமுறை சென்றிருந்தேன். இருப்பினும் இன்று தான் முழு படத்தையும் பார்த்தேன். ஒவ்வொரு விஷயத்தையும் இயக்குனர் அன்பு மிக அருமையாக செய்திருக்கிறார். இளையராஜா “ராஜா ராஜாதான்” என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். சண்முக பாண்டியன் மிகவும் நன்றாக நடித்திருக்கிறார். கேப்டனை மீண்டும் திரையில் பார்த்த சந்தோஷத்தை கொடுத்தது. அதே நேரத்தில் ஒரு வித அழுத்தத்தையும் கொடுத்தது. படம் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்று சண்முகப் பாண்டியனின் அம்மாவாக நான் மனப்பூர்வமாக ஆசிர்வதிக்கிறேன்” என்று எமோஷனலாகப் பேசினார்.
நடிகை அம்பிகா பேசியதாவது, “படத்தின் ஆரம்பத்தில் சண்முக பாண்டியனின் கதாபாத்திரம் மெதுவாக சென்று கொண்டிருந்தது. ஆனால் சண்டைக் காட்சிகளுக்குப் பிறகு அவரை பார்க்கும் பொழுது விஜயகாந்தைப் பார்த்தது போலவே இருந்தது. மிகவும் எமோஷனலாக இருந்தது. தயவுசெய்து இரண்டு முறையாவது சென்று படத்தைப் பாருங்கள். உங்கள் அனைவருக்கும் படம் கண்டிப்பாக பிடிக்கும். சண்முக பாண்டியன் இன்னும் பல உயரத்தை அடைய என்னுடைய வாழ்த்துக்கள்” என்று கூறினார்.