நடிகர் சூர்யாவுக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அவர்களை மகிழ்விக்கும் விதமாக தொடர்ந்து படங்களில் நடித்து வரும் சூர்யா, தற்போது கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். வரலாற்று கதையம்சம் கொண்ட இப்படத்திற்காக மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார் சூர்யா. சமீபத்தில் சூர்யாவின் பிறந்தநாளுக்கு வெளியான கிளிம்ப்ஸ் வீடியோவே அதற்கு சாட்சியாக அமைந்தது.
நடிகர் சூர்யா, சினிமாவை தாண்டி ரியல் லைஃபிலும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். அகரம் பவுண்டேஷன் மூலம் ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவிக்கரம் நீட்டி வரும் சூர்யா, சமூகத்தில் தனக்கென உள்ள நன்மதிப்பை கெடுத்துக் கொள்ளும் வகையில் ஒரு செயலை செய்துள்ளார். இதனால் அவரை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
சூர்யா இப்படி விமர்சனத்திற்கு உள்ளானதற்கு காரணம் அவரின் கங்குவா பட கிளிம்ப்ஸ் வீடியோ தான். யூடியூப்பில் டிரெண்டிங்கில் இருக்கும் இந்த கிளிம்ப்ஸ் வீடியோவின் தொடக்கத்திலேயே ஆன்லைன் சூதாட்ட செயலிக்கு விளம்பரம் இடம்பெற்றுள்ளது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. வீடியோவுக்கு கீழே படக்குழுவினரின் விவரங்கள் தான் முதலில் கொடுக்கப்படும், ஆனால் கங்குவா கிளிம்ப்ஸ் வீடியோவில் ஆன்லைன் சூதாட்டத்துக்கான லிங்க் தான் முதலில் கொடுக்கப்பட்டு உள்ளது.
அத்தோடு வீடியோ தொடங்கியதும் முதல் மூன்று நொடிகளுக்கு ஆன்லைன் சூதாட்ட செயலிக்கான விளம்பரம் தான் வருகிறது. சுமார் 2 கோடிக்கு மேல் பார்வைகளைப் பெற்றிருக்கும் அந்த கிளிம்ப்ஸ் வீடியோவில் இடம்பெற்றிருக்கும் ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரத்தை பார்த்து எத்தனை பேர் அதனை பயன்படுத்த தூண்டப்பட்டு இருப்பார்கள் என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் நடிகர் சூர்யா இப்படி சூதாட்ட செயலிக்கு விளம்பரம் கொடுத்திருப்பது விவாதப் பொருள் ஆகி உள்ளது.
இதையும் படியுங்கள்... தமிழ் சினிமாவில் ஹீரோயின்களுக்கு தட்டுப்பாடா? கோலிவுட்டில் திடீரென மலையாள நடிகைகளுக்கு ஏற்பட்ட செம டிமாண்ட்
பணம் கட்டி சீட்டு விளையாடுவதோடு, கிரிக்கெட் போன்ற ஆட்டங்களுக்கு பெட் கட்டுவது என அந்த சூதாட்ட செயலியை ஓபன் செய்தாலே விளையாடத் தூண்டும் வகையில் அது வடிவமைக்கப்பட்டு உள்ளது. அத்தோடு அந்த செயலியை தரவிறக்கம் செய்தாலே 1300 சதவீதம் போனஸ் தொகை கொடுக்கப்படும் என கவர்ச்சியான விளம்பரங்களையும் போட்டுள்ளனர்.
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து ஏராளமானோர் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறிக் கொண்டிருக்கும் நிலையில், சமூக பொறுப்புள்ள நடிகராக தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் சூர்யாவே இப்படி தன் பட முன்னோட்ட வீடியோவில் விளம்பர கொடுத்துள்ளது, ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
கல்வி தான் ஒருவரின் வாழ்க்கையை மாற்றும் என செல்லும் இடமெல்லாம் வசனம் பேசும் சூர்யா, ஆன்லைன் சூதாட்ட செயலியை புரமோட் செய்துள்ளது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுந்துள்ளது. ஒருபக்கம் ஆன்லைன் சூதாட்டத்தை அடியோடு ஒழிக்க தமிழக அரசு படாதபாடு பட்டு வரும் நிலையில், அதைப்பற்றி எந்த கவலையும் இன்றி பணத்துக்காக ஆன்லைன் சூதாட்டத்துக்கு விளம்பரம் கொடுக்கும் திரைப்பிரபலங்கள் வரிசையில் தற்போது நடிகர் சூர்யாவும் இணைந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதையும் படியுங்கள்... ஒரேநாளில் 2 ஜெயிலர் படம் ரிலீஸ்.. ரஜினி பட வசூலுக்கு வேட்டு வைக்க நடக்கும் வேலை! தகர்த்தெறிவாரா சூப்பர்ஸ்டார்?