பிரபல தெலுங்கு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற படம் பாகுபலி. கடந்த 2015-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்க, ராணா டகுபதி வில்லனாக மிரட்டி இருந்தார். சரித்திர கதையம்சம் கொண்ட இப்படத்தில் ராஜமாதாவாக ரம்யா கிருஷ்ணனும், கட்டப்பாவாக சத்யராஜும், தேவசேனாவாக அனுஷ்காவும் திறம்பட நடித்து படத்துக்கு கூடுதல் பலம் சேர்த்திருந்தனர்.
இப்படத்தின் முதல் பாகம் பிரம்மாண்ட வெற்றியை ருசித்தோடு மட்டுமின்றி, கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற டுவிஸ்ட்டுடன் முடித்திருந்தது, இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்தது. இதற்காக ரசிகர்களை 2 ஆண்டுகள் காக்க வைத்த படக்குழு, 2017-ம் ஆண்டு பாகுபலி 2-ம் பாகத்தை வெளியிட்டு ரசிகர்களின் கேள்விக்கு விடை அளித்தது.
முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் வசூல் புரட்சி செய்தது. உலகளவில் இப்படத்தை கொண்டாடினர். இந்திய அளவில் எந்த திரைப்படமும் செய்திராத மாபெரும் வசூல் சாதனையை படைத்தது. இப்படம் சுமார் 1,800 கோடிக்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து பாகுபலி கதையை வெப் தொடராக தயாரிக்க உள்ளதாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்தது. பாகுபலியில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்த ராஜமாதா சிவகாமிதேவி கதாபாத்திரத்தின் இளம் வயது வாழ்க்கையை மையப்படுத்தி இந்த தொடரை உருவாக்கினர். சுமார் 9 எபிசோடுகளை கொண்ட இந்த வெப் சீரிஸ், ரூ.200 கோடி பட்ஜெட்டில் தயாராகி வந்தது.
ராஜமவுலி திரைக்கதை எழுத, தேவ கட்டா என்பவர் இயக்கினார். சிவகாமி தேவியின் இளம் வயது கதாபாத்திரத்தில் மிருனால் தாகூர் நடித்து வந்தார். ஐதராபாத்தில் பிரம்மாண்ட செட் அமைத்து 6 மாதங்களுக்கு மேல் படப்பிடிப்பும் நடந்தது. இதற்காக 100 கோடிக்கு மேல் செலவிடப்பட்டது.
பின்னர் தேவ கட்டா படமாக்கிய காட்சிகள் திருப்தி அளிக்காததால், அவரை மாற்றிவிட்டு குனால் மற்றும் ரிஷு ஆகியோரிடம் இயக்குனர் பொறுப்பு ஒப்படைத்தனர். அவர்களாலும் இப்படத்தை திட்டமிட்டபடி எடுக்கமுடியாத காரணத்தால், பாகுபலி வெப் தொடர் எடுக்கும் முயற்சியை தற்போதைக்கு கைவிட்டுள்ளனர். இதற்காக இதுவரை செலவு செய்த ரூ.150 கோடி வீணாகி உள்ளது.