
Naga Chaitanya Sobhita Dhulipala Wedding Photos : வாரிசு நடிகரான நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் திருமணம் இனிதே நடைபெற்று முடிந்துள்ளது. திருமணத்திற்கு முன்னதாக அன்னபூர்ணா ஸ்டூடியோவானது விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
வர்களின் முதல் திருமண புகைப்படங்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் தற்போது புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதோடு, நடிகரும், நாக சைதன்யாவின் தந்தையுமான நாகர்ஜூனா மணமக்களை வாழ்த்தி தனது எக்ஸ் பக்கத்தில் அவர்களது திருமண புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
திருமணம் குறித்து நாகர்ஜூனா கூறியிருப்பதாவது: இந்த அழகான அற்புதத்தை இருவரும் ஒன்றாக தொடங்குவதை பார்ப்பது என்பது எனக்கு ஒரு உணர்சிகரமான தருணமாக இருந்தது. எனது அன்பான சாய்க்கு வாழ்த்துக்கள். சோபிதா நீங்கள் எங்களது வாழ்க்கையில் ஏற்கனவே மகிழ்ச்சியை கொண்டு வந்துவிட்டீர்கள்.
அக்கினேனி நாகேஸ்வர ராவின் நூற்றாண்டு விழாவை குறிக்கும் வகையில் நிறுவப்பட்ட ANR (Akkineni Nageswara Rao) காருவின் திருவுருவ சிலையின் ஆசீர்வாதத்தின் கீழ் இந்த அற்புதமான கொண்டாட்டம் வாழ்க்கையில் ஆனந்தத்தை கொண்டு வந்துள்ளது. இந்த பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் அவரது அன்பும் ஆசியும் வழிகாட்டுதலும் நம்முடன் இருப்பதாகவே நான் உணர்கிறேன். இன்று பொழிந்திருக்கும் ஆசீர்வாதங்களுக்கு நன்றி கூறுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
தனது குடும்ப பாரம்பரியத்தை கௌரவிக்கும் வகையில், நாக சைதன்யா தனது திருமணத்திற்கு பாரம்பரிய உடை அணிந்து, தனது தாத்தா அக்கினேனி நாகேஸ்வர ராவை கௌரவித்தார். ஆந்திரப் பிரதேசத்தின் பாரம்பரிய வேட்டியான இந்த உடை, தெலுங்கு கலாச்சாரம் மற்றும் அவரது தாத்தாவின் சின்னமான பாணியை சைதன்யா மதிக்கிறார் என்பதை பிரதிபலிக்கிறது.
சோபிதா துலிபாலாவும் தனது குடும்ப பாரம்பரியத்தை ஏற்றுக்கொள்கிறார். ஹல்தி சடங்குக்கு சமமான ராதா சடங்கின் போது, அவர் தனது தாய் மற்றும் பாட்டியிடமிருந்து வந்த பரம்பரை தங்க நகைகளை அணிந்திருந்தார். நேர்த்தியான ஆனால் எளிமையான பாணிக்கு பெயர் பெற்ற சோபிதாவின் திருமண உடையைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். அவர்களுக்கு இந்த புகைப்படங்கள் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளித்துள்ளது.
திருமணம் நெருக்கமானதாக இருந்தாலும் பிரமாண்டமாகவே நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் நடிகர் சிரஞ்சிவீ உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.