
1989-ம் ஆண்டு வெளிவந்த மாட்டுக்கார மன்னர் படம் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமான தேவா, இதுவரை தென்னிந்திய மொழிகளில் 400 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை புரிந்திருக்கிறார். கானா பாடல்கள் என்றாலே தேவாவின் இசை தான் என்று அனைவரும் கூறும் அளவுக்கு தனக்கென ஒரு தனி அடையாளத்தையே உருவாக்கியவர் தேவா.
ஆற்காடு அருகே உள்ள மாங்காடு என்கிற கிராமத்தில் பிறந்தவர் தான் தேவா. இவரின் இயற்பெயர் தேவநேசன் சொக்கலிங்கம். இசையமைப்பாளர் தேவா பிறந்து வளர்ந்தது எல்லாம் மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டம் பக்கத்தில் இருக்கும் குடிசை பகுதி தான். இயல்பாகவே சென்னையில் காசிமேடு, ராயபுரம், வில்லிவாக்கம் பகுதிகளில் கானா பாடல்கள் தேவாவுக்கும் மிகவும் பரிட்சயமான ஒன்று.
ஜேபி கிருஷ்ணாவிடம் ஹார்மோனியம் கற்றுக் கொண்டவர் தேவா. அதேபோல் தன்ராஜ் மாஸ்டரிடம் வெஸ்டர்ன் இசையை கற்று, அதற்காக சென்னையில் இருந்துகொண்டே லண்டன் டிரினிட்டி காலேஜ் நடத்தும் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றவர் தேவா. கர்நாடக சங்கீதமும் கற்றுக் கொண்ட தேவா, தன்னுடைய பாடல்களை ராகம் அடிப்படையிலேயே வடிவமைப்பார்.
தேவா தமிழ் சினிமாவுக்கு வரும் முன்பே 600க்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களுக்கு இசையமைத்து இருந்தார். 1981-ம் ஆண்டு அத்தான் என்கிற திரைப்படத்திற்கு தேவா இசையமைத்தார். தேங்காய் சீனிவாசம் நடிப்பில் உருவான அப்படம் வெளிவரவில்லை. அதன்பின்னர் 13 படங்களுக்கு இசையமைத்தார் தேவா, அந்த படங்களில் ஒன்றுகூட ரிலீஸ் ஆகவில்லை. இதையடுத்து 1986-ம் ஆண்டு அவர் இசையமைத்த மாட்டுக்கார மன்னர் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இப்படம் தான் அவரின் முதல் படமாக அமைந்தது.
தேவாவுக்கு அடையாளத்தை கொடுத்த படம் என்றால் அது வைகாசி பொறந்தாச்சு படம் தான். இப்படத்தில் அவர் இசையமைத்த சின்னப்பொண்ணு தான் வெட்கப்படுது என்கிற பாடல் தேவாவை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது. 1990-ம் ஆண்டு வெளியான வைகாசி பொறந்தாச்சு படத்தில் பாட்டு, பின்னணி இசை என அனைத்திலும் கவனம் ஈர்த்தார் தேவா. அந்த ஆண்டு சிறந்த பின்னணி இசைக்கான தமிழக அரசின் விருதும் தேவாவுக்கு வழங்கப்பட்டது.
இதையடுத்து 1992-ம் ஆண்டு வெளிவந்த சூரியன் படம் மூலம் லாலாக்கு டோல் டப்பி மா என்கிற பாடல் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தார் தேவா. அதேபோல் அப்படத்தில் இடம்பெறும் 18 வயது பாடல் அன்றைய 18 வயசு இளசுகளை ஏங்க வைத்தது. தேவாவின் இசையில் அதிகம் பாடியவர்களில் சித்ரா, ஸ்வர்னலதா, அனுராதா ஸ்ரீராம் ஆகியோருக்கு தனி இடம் உண்டு. திரைக்கு வந்து 10 ஆண்டுகளில் ஆசை படத்திற்கு இசையமைத்ததற்காக இரண்டாவது முறையாக தமிழக அரசு விருதை வென்றார் தேவா.
விஜய் - சூர்யா என இரு நட்சத்திரங்கள் ஒன்றாக நடித்து வெளிவந்த திரைப்படம் நேருக்கு நேர். இப்படத்தை வெற்றிப்படமாக மாற்றியதில் பாடல்களுக்கு முக்கிய பங்கு உண்டு. 90களில் இசைப்புயலாக ஏ.ஆர்.ரகுமான் வலம் வந்தாலும், அவர் காஸ்ட்லியான இசையமைப்பாளராக இசை உலகை ஆட்டிப்படைத்தார். அந்த காலகட்டத்தில் இளையராஜாவும் பெரியளவில் சம்பளம் வாங்கியதால், சீப் அண்ட் பெஸ்ட் இசையமைப்பாளராக இருந்தது தேவா மட்டும் தான்.
இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா - தேவா கூட்டணி அந்த காலகட்டத்தில் சக்கைப்போடு போட்ட ஒரு வெற்றிக் கூட்டணி ஆகும். குறிப்பாக சூப்பர்ஸ்டாருக்கு டைட்டில் கார்டை உருவாக்கிய டிரெண்ட் செட்டர்கள் இவர்கள் தான். இவர்கள் கூட்டணியில் உருவான அண்ணாமலை படத்தில் தான் சூப்பர் ஸ்டாருக்கு டைட்டில் கார்டு போடப்பட்டது. அதற்கு தேவா போட்ட பின்னணி இசை தான் இன்று வரை அவர் நடிக்கும் படங்களில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
விஜய்யின் தமிழ் சினிமா கெரியரில் தேவா ஒரு மறக்க முடியாத உழைப்பை கொடுத்துள்ளார் என்பது மறுக்க முடியாத உண்மை. நினைத்தேன் வந்தாய், பிரியமுடன், குஷி என விஜய்க்கு தொடர்ந்து ஹிட் படங்களுக்கு இசையமைத்தவர் தேவா. தமிழ் மட்டுமின்றி பிற மொழிகளிலும் மோகன்லால், மம்முட்டி, நாகார்ஜுனா, சிரஞ்சீவி, விஷ்ணுவர்தன் என மலையாளம், தெலுங்கு, கன்னடத்திலும் முன்னணி நாயகர்களின் படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார் தேவா.
இப்படி இசையுலகில் பல சாதனைகளைப் படைத்துள்ள தேவா, கடந்த 1997-ம் ஆண்டு செம பிசியாக இருந்த காலகட்டத்தில் அந்த ஒரே ஆண்டில் 37 படங்களுக்கு இசையமைத்து அந்த ஆண்டு அதிக படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் என்கிற சாதனையை படைத்திருந்தார் தேவா. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அந்த ஆண்டு தீபாவளிக்கு மட்டும் தேவா இசையமைத்த 8 படங்கள் போட்டிபோட்டு ரிலீஸ் ஆகின. அதில் பெரும்பாலானவை ஹிட் படங்கள் தான். தன்னுடைய இந்த வெற்றிக்கு காரணம் தன்னுடைய தம்பிகள் தான் என்று பெருமிதத்துடன் கூறுகிறார் தேவா. அவர் தம்பிகள் என்று சொன்னது வேறுயாரையுமில்லை அவருடன் பணியாற்றிய இசைக்கலைஞர்களை தான். இரவு பகல் பாராமல் தன்னுடன் அவர்கள் உழைத்ததால் இத்தனை படங்களை ஒரே ஆண்டில் செய்து முடிக்க முடிந்தது என தேவா கூறி இருக்கிறார்.