மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் திரைப்படம் தியேட்டரில் கடந்த ஜூன் மாதம் ரிலீஸ் ஆனது. வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படத்தில் பகத் பாசில் வில்லனாக மிரட்டி இருந்தார். மாபெரும் வரவேற்பை பெற்ற மாமன்னன் திரைப்படம் கடந்த மாதம் ஓடிடியில் ரிலீஸ் ஆனது. ஓடிடியில் வெளியான பின்னர் இப்படத்திற்கு உலகளவில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
அதுமட்டுமின்றி இப்படத்தில் சாதி வெறி பிடித்த கொடூர வில்லனாக நடித்திருந்த பகத் பாசிலின் ரத்தினவேல் கேரக்டரை ஒரு ஹீரோவாக மாற்றி அதை நெட்டிசன்கள் கொண்டாடிய சம்பவங்கள் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது சாதி வெறியை தூண்டும் விதமாக உள்ளதாக எதிர்ப்புகளும் கிளம்பின. இதுகுறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்த நிலையில், இன்று பகத் பாசிலின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு நீண்ட நெடிய பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... ஹீரோ டூ வில்லன்... அசுர வளர்ச்சி கண்ட நடிகர் பகத் பாசிலின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
அதில், “வணக்கம் பகத் சார்! உங்கள் இரண்டு கண்களும் எனக்கு அவ்வளவு பிடிக்கும். அந்த இரண்டு கண்களை வைத்துதான் என் ரத்தினவேல் கதாபாத்திரத்தை உருவாக்கினேன். ஒரு கண்ணில் பல தலைமுறைகளாக சொல்லிக்கொடுக்கப்பட்ட வாழ்க்கைமுறை சரி என்ற நம்பிக்கையை தீர்க்கமாக வையுங்கள் என்றேன். மற்றொரு கண்ணில் புதிய தலைமுறைகள் முளைத்து வந்து கேட்கும் வாழ்வியல் முரணுக்கான ஆக்ரோஷ கேள்விகளையும் குழப்பங்களையும் வையுங்கள் என்றேன்.
மிகச்சரியாக இரண்டு கண்களிலும் இரண்டு நேரெதிர் வாழ்வை வைத்து என் படம் முழுக்க அப்படியே பயணித்தீர்கள். இறுதியாக இரண்டு கண்களையும் மூட சொன்னேன். ஏனென்று கேட்காமல் மூடினீர்கள். உங்கள் நெஞ்சுக்கூட்டுக்குள் டாக்டர்.அம்பேத்கரின் குரலை ஒங்கி ஒலிக்க விட்டேன். அவ்வளவுதான் உடல் சிலிர்த்து நீங்கள் ஓடிவந்து என்னை அணைத்துக்கொண்ட அந்த நொடி தீரா பரவசத்தோடு சொல்கிறேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பகத் சார்” என வாழ்த்துக்களுடன் தன் அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார் மாரி செல்வராஜ்.
இதையும் படியுங்கள்... மலையாள மாஸ் ஹீரோ... தமிழ்நாட்டில் பேமஸ் ஆனது எப்படி? பகத் பாசில் நடித்த தரமான தமிழ் படங்கள் - ஒரு பார்வை