இன்று இந்திய திரையுலகமே திரும்பி பார்க்கும் ஒரு நடிகராக இருக்கிறார் பகத் பாசில். இவரின் திரைப்பயணம் காதலுக்கு மரியாதை என்கிற ஹிட் படத்தை கொடுத்த அவரது தந்தை பாசில் இயக்கிய கையேதும் தூரத்து என்கிற பிளாப் படம் மூலம் தொடங்கியது. முதல் படமே தோல்வியடைந்ததால், இனி நடிக்க வேண்டுமா என பகத் என்னும் அளவுக்கு அவரை விமர்சனங்கள் தாக்கின. அப்போது நடிப்பில் இருந்து விலகி வெளிநாட்டுக்கு படிக்க சென்றுவிட்டார்.
பின்னர் 7 வருடங்கள் கழித்து திரையுலகில் மீண்டும் காலடி எடுத்த வைத்த பகத், இம்முறை கதாநாயகனாக மட்டும் தான் நடிப்பேன் என முரண்டு பிடிக்காமல், கிடைக்கும் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் ஒரு கை பார்த்துவிடலாம் என களத்தில் இறங்கினார். பகத்தின் நடிப்பை ஆரம்பத்தில் விமர்சனம் செய்தவர்கள் எல்லாம் அவர் ஒரு தவிர்க்க முடியாத நடிகர் என சொல்லும் அளவுக்கு தன் நடிப்பால் விமர்சகர்களை பிரம்மிக்க வைத்தால் பகத்.
காதல், நகைச்சுவை, டிராமா, கேங்ஸ்டர், வில்லன் என எந்த வகை கதாபாத்திரமாக இருந்தாலும் அபாரமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தும் பகத், அதை கண்களிலேயே தெறிக்கவிட்டு விடுவார். நடிக்க சம்பளம் தடையல்ல, புது இயக்குனர் என்ற தடையெல்லாம் கிடையாது. கதை பிடித்துவிட்டால் போதும் எந்த கேரக்டராக இருந்தாலும் சரி, ஒரு கை பார்த்துவிடலாம் என கோதாவில் இறங்கிவிடுவார் பகத் பாசில்.
சின்ன ரோலாக இருந்தாலும் நல்ல ரோலாக இருக்க வேண்டும் என விரும்பும் பகத், அப்படி தேர்ந்தெடுத்து நடித்த மற்றொரு தமிழ் படம் தான் சூப்பர் டீலக்ஸ். இப்படத்தில் மனைவி தடம் மாறி சென்றதும், தன்னிடம் இல்லாதது எது அவனிடம் இருக்கிறது என உருகும் காட்சியில் ஒட்டுமொத்த நடிப்பையும் அப்பட்டமாக்கி இருப்பார் பகத்.
புஷ்பா படத்தில் இரண்டாம் பாதியில் வந்தாலும், மொட்டை பாஸாக மாஸ் காட்டி அப்ளாஸ் வாங்கி இருந்தார் பகத். புஷ்பாவின் இரண்டாம் பாதி என்றால், கமலின் விக்ரம் படத்தில் முதல் பாதி முழுவதும் பகத்தின் ராஜ்ஜியம் தான். அவரின் நடிப்பால் முதல் பாதி முழுக்க படத்தை தன் தோழில் சுமந்து சென்றிருக்கும் அவரது அமர் கேரக்டருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இதையடுத்து மாமன்னன் படத்தில் வெறும் கண் பார்வையிலேயே வில்லத்தனத்தில் மிரள செய்து ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டது அவரது ரத்னவேலு கேரக்டர். ஒரு வில்லனை ஹீரோ ரேஞ்சுக்கு கொண்டாட முடியும் என உணர்த்தியது பகத் பாசில் தான். எந்த மொழியில் நடித்தாலும் அந்த மொழியை கற்று நடித்து வரும் பகத் பாசில், தற்போது பான் இந்தியா நடிகராக வளர்ந்து வருகிறார். அவர் இந்த அளவுக்கு வெற்றி மேல் வெற்றியை குவித்து வருவதற்கு அவரது தோல்வி தன் உத்வேகம் என அவரே பலமுறை கூறி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... தமன்னாவை பார்த்ததும் பாய்ந்து வந்த ரசிகர்... அலேக்காக தூக்கி எறிந்த பவுன்சர்கள் - வைரலாகும் வீடியோ