பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி, கடந்த ஆண்டு தமிழ் திரையுலகில் ஹீரோயினாக காலடி எடுத்து வைத்தார். அவர் சூர்யா தயாரிப்பில் வெளியான விருமன் படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானார்.
விருமன் படத்தின் வெற்றிக்கு பின்னர் அதிதிக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் மாவீரன் திரைப்படம். மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் அதிதி. இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மாவீரன் படத்தில் நடித்து முடித்த பின், அதிதி ஷங்கர் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ராட்சசன் படத்தின் இயக்குனர் ராம்குமார் இயக்க உள்ள புதிய படத்தில் தான் அதிதியும் விஷ்ணு விஷாலும் ஜோடியாக நடிக்க உள்ளார்களாம்.
அதிதி நடிகையாக மட்டுமின்றி பாடகியாகவும் சிறந்து விளங்கி வருகிறார். ஏற்கனவே விருமன் படத்தில் யுவன் சங்கர் ராஜாவுடன் சேர்ந்து இவர் பாடிய மதுர வீரன் என்கிற பாடல் பட்டிதொட்டி எங்கும் பட்டைய கிளப்பியது.
படங்களில் பிசியாக நடித்து வரும் அதிதி, சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இயங்கி வருகிறார். குறிப்பாக விதவிதமாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் அதிதி.