ஒவ்வொரு புதிய பட வெளியீட்டிலும் மற்ற திரையுலகிற்கு முன்மாதிரியாக விளங்குகிறது மலையாள சினிமா. கதை, தயாரிப்பு என எதிலும் சமரசம் செய்யாத மலையாள திரைப்படக் குழுவினரே இதற்குக் காரணம். மலையாள ரசிகர்களைத் தாண்டி, பிற மொழி ரசிகர்களையும் மலையாளப் படங்கள் கவர்ந்து வருகின்றன. மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு போன்ற படங்களுக்குக் கிடைத்த வரவேற்பு இதற்குச் சான்று. இந்த வரிசையில் மற்ற திரையுலகிற்கு முன்மாதிரியாக விளங்கும் மற்றொரு படம் லோகா: சாப்டர் 1 சந்திரா.
24
தூள் கிளப்பும் லோகா
சூப்பர் ஹீரோ படமான இதில் கல்யாணி பிரியதர்ஷன் கதையின் நாயகியாக நடித்துள்ளார். மேலும் நஸ்லின், சந்து, சலீம் குமார் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் துணை நிற்க, சிறப்புத் தோற்றங்களும் அணி சேர்க்க, லோகா படம் ரசிகர்களுக்குப் புதிய திரை அனுபவத்தைத் தந்து வெற்றி நடை போடுகிறது. வெளியான முதல் நாளிலிருந்தே நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம், வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. புதிதாக வெளியான படங்களை எல்லாம் லோகா படம் பின்னுக்குத் தள்ளிவிட்டது.
34
லோகா பாக்ஸ் ஆபிஸ்
தமிழ்நாட்டிலும் லோகா திரைப்படம் சக்கைப்போடு போட்டு வருகிறது. இப்படம் தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆன நான்கு நாட்களில் ரூ.3.85 கோடி வசூலித்திருந்தது. உலகளவில் இப்படத்தின் வசூல் 100 கோடியை நெருங்கி வருகிறது. இன்னும் சில தினங்களில் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் செஞ்சுரி அடித்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரேமம், மஞ்சும்மல் பாய்ஸ் படங்களுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது லோகா. இப்படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பால், இதற்கு அதிகளவிலான திரையரங்குகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் தற்போது பெரும்பாலான தியேட்டர்களில் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் தான் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படம் செப்டம்பர் 2-ந் தேதி தமிழ்நாட்டில் வெறும் ரூ.86 லட்சம் தான் வசூலித்து இருந்தது. ஆனால் லோகா திரைப்படம் நேற்று மட்டும் தமிழ்நாட்டில் ரூ.90 லட்சத்திற்கும் மேல் வசூலை வாரிக் குவித்துள்ளது. வார நாட்களில் வேற்று மொழி படத்திற்கு இந்த அளவு வரவேற்பு கிடைத்துள்ளது ஒரு அரிதான நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. இப்படத்தை துல்கர் சல்மான் தான் தயாரித்து இருந்தார். இப்படம் வெறும் 30 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.