
கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா ஜோடி பெற்றோர்களாகியுள்ளனர். கியாராவுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தம்பதியினருக்குத் திருமணமாகி இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. மும்பையில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனையில் கியாராவுக்கு சுகப்பிரசவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. தாய், சேய் இருவரும் நலமாக உள்ளனர். இந்த ஆண்டு பிப்ரவரியில், தாங்கள் பெற்றோர்களாகப் போவதாக கியாராவும் சித்தார்தும் சமூக வலைதளங்கள் மூலம் அறிவித்தனர். குழந்தையின் சாக்ஸை கையில் வைத்திருக்கும் புகைப்படத்தை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். "எங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய பரிசு விரைவில் வரவுள்ளது" என்று அவர்கள் படத்திற்குக் கீழே எழுதியிருந்தனர்.
கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா ஜோடி திருமணமாகி இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு பெற்றோர்களாகியுள்ளனர். 2020 ஆம் ஆண்டில் இருவரும் காதலிக்கத் தொடங்கினர். அப்போது அவர்கள் 'ஷெர்ஷா' படத்தில் நடித்துக் கொண்டிருந்தனர். இருப்பினும், திருமணத்திற்கு முன்பு வரை அவர்கள் தங்கள் உறவைப் பற்றி வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவில்லை. 2023ம் ஆண்டு பிப்ரவரி 7ந் தேதி அன்று ஜெய்சால்மரில் அவர்களது திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணம் இந்து முறைப்படி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. திருமணத்தில் தம்பதியின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்டனர்.
சினிமாவைப் பொறுத்தவரை, சித்தார்த் மல்ஹோத்ரா கடைசியாக 'யோத்தா' படத்தில் நடித்திருந்தார். இது 2024 இல் வெளியிடப்பட்டது. அவரது அடுத்த படம் 'பரம் சுந்தரி', இது இந்த ஆண்டு வெளியிடப்படும். இதைத் தொடர்ந்து, அவர் 2026 இல் திரைக்கு வரும் Vvan: Force of the Forrest படத்தில் நடிக்க உள்ளார். மறுபுறம் சித்தார்த் மல்ஹோத்ராவின் மனைவி கியாரா அத்வானியும் செம பிசியாக நடித்து வந்தார். கடைசியாக அவர் நடிப்பில் 'கேம் சேஞ்சர்' திரைப்படம் வெளியானது. ஷங்கர் இயக்கிய இந்த பிரம்மாண்ட படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக நடித்திருந்தார் கியாரா. இப்படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி படு தோல்வியடைந்தது.
கேம் சேஞ்சர் தோல்விக்கு பின்னர் 'வார் 2' என்கிற இந்தி படத்தில் நடித்து முடித்துள்ளார் கியாரா. இப்படத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஆகஸ்ட் 14ந் தேதி திரைக்கு வர உள்ளது. இதுதவிர டாக்ஸிக் என்கிற பான் இந்தியா படத்திலும் நடித்து வருகிறார் கியாரா. இப்படத்தை கீத்து மோகன் தாஸ் இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் யாஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார் கியாரா. இப்படத்தில் நடிகை நயன்தாராவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகை கியாரா கர்ப்பமாக இருந்ததன் காரணமாக அப்படத்தின் படப்பிடிப்பை மும்பையிலேயே நடத்தினார்கள். இப்படம் வருகிற 2026-ம் ஆண்டு திரைக்கு வர உள்ளது.