ஏரோ இந்தியா எனும் விமானக்கண்காட்சி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியினை பிரதமர் நரேந்திர மோடி தான் தொடங்கி வைத்தார். இதற்காக நேற்று பெங்களூரு வந்த பிரதமர் மோடியை கன்னட திரையுலக நட்சத்திரங்கள் சந்தித்து பேசியுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு ராஜ்பவனில் நடந்த இந்த சந்திப்பில் கர்நாடகாவை சேர்ந்த தொழிலதிபர்கள், கன்னட சினிமா நட்சத்திரங்கள் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர்களும் கலந்துகொண்டு பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பிரதமர் மோடி கன்னட திரைப்பிரபலங்களை சந்தித்தது இதுவே முதன்முறையாகும். அப்போது மோடியுடன் கன்னட சினிம நட்சத்திரங்கள் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
அப்போது கன்னட சினிமா குறித்து மோடியிடம் அவர்கள் கலந்துரையாடியதாக கூறப்படுகிறது. ரிஷப் ஷெட்டி மற்றும் யாஷ் இருவரும் கன்னட திரையுலகில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து மோடியுடன் பேசியதாக கூறப்படுகிறது.
அதேபோல் அதிக வரி செலுத்தும் திரையுலகமாக கன்னட திரையுலகம் இருப்பதால் தங்களுக்கு சிறந்த வசதிகளை செய்து தர வேண்டும் என்று ஹோம்பாலே பிலிம்ஸ் தலைவர் விஜய் கிர்கந்தூர் வேண்டுகோள் விடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும் கர்நாடகாவை திரைப்பட நகரமாக மாற்ற வேண்டும் என்றும் வெளிநாட்டில் இருப்பது போல் இங்கும் பல்வேறு வசதிகளை செய்து தர வேண்டும் என்று மோடியிடம் யாஷ் கோரிக்கை விடுத்துள்ளார். தகவல் தொழில்நுட்பத் துறையை பிரதமர் மோடி எவ்வாறு வளர்த்திருக்கிறாரோ, அதுபோல கன்னடத் திரையுலகையும் மேம்படுத்த உதவ வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.