கே.ஜி.எஃப் என்கிற வார்த்தையை கேட்டதும் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது யாஷ் தான். அந்த அளவுக்கு அவரின் கதாபாத்திரமும், அப்படமும் மக்களின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அண்மையில் வெளியான கே.ஜி.எஃப் 2 திரைப்படம் யாஷை உலகளவில் பாப்புலர் ஆக்கி விட்டது என்றே சொல்லலாம்.
இவ்வாறு திரையுலகில் ராக்கிங் ஸ்டாராக விளங்கும் யாஷ், கடந்து வந்த பாதை மிகவும் கடினமானது. சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தோடு இருப்பவர்களுக்கு இவரது சாதனை பயணம் நிச்சயம் ஒரு பாடமாக இருக்கும். சினிமாவில் சூப்பர்ஸ்டார் ஆக வேண்டும் என்கிற கனவோடு பையில் 300 ரூபாய் பணத்தோடு வந்த யாஷ், சோதனைகளைக் கடந்து சாதித்தது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நடிகர் யாஷின் இயற்பெயர் நவீன் குமார் கெளடா, நாடகங்களில் யாஷ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானதால் அதுவே இவரது பெயராகவும் மாறியது. சிறுவயதில் இருந்தே சினிமாவில் சூப்பர்ஸ்டார் ஆக வேண்டும் என்கிற கனவோடு இருந்துள்ளார் யாஷ். பள்ளியில் ஆசிரியர் நீ எதிர்காலத்தில் என்னவாக ஆகப்போகிறாய் என கேட்டால், சினிமாவில் ஹீரோ ஆகப்போகிறேன் என்பாராம் யாஷ்.
இதைக்கேட்டு சக மாணவர்கள் சிரித்தாலும், தன்னால் முடியும் என நம்பியுள்ளார் யாஷ். அப்போது அதற்காக எவ்வளவு உழைக்க வேண்டும் என்று எதுவும் ஐடியா இல்லாதபோதும் நடிகனாக வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தாராம். யாஷின் குடும்பத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கல்லூரியில் படித்து பட்டம் பெற்று ஏதேனும் நல்ல வேலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர். அந்த சமயத்தில் யாஷின் தந்தை பஸ் கண்டக்டராக இருந்துள்ளார்.
குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி கையில் 300 ரூபாய் பணத்துடன் வீட்டை விட்டு ஓடி வந்த யாஷ், மைசூரில் இருந்து பெங்களூருக்கு வந்து அங்கு உள்ள நாடகக் கம்பேனியில் பேக் அப் நடிகராக சேர்ந்துள்ளார். ஒரு நாடகம் நடக்கிறது என்றால் அதில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களையும் கற்றுக்கொள்வாராம். ஏனெனில் அதில் நடிக்கும் யாரெனும் ஒருவர் உடல்நிலை சரியில்லாமலோ அல்லது பங்கெடுத்துக்கொள்ள முடியாமலோ போனால் அவர்களுக்கு பதில் யாஷ் நடிப்பாராம்.
இதையடுத்து படிப்படியாக முன்னேறி சினிமாவில் வாய்ப்பு கிடைத்தாலும், அதிலும் பல சோதனைகளைக் கடந்து தான் தற்போது கே.ஜி.எஃப் படம் மூலம் இந்தியாவே கொண்டாடும் ராக்கிங் ஸ்டாராக உயர்ந்துள்ளார். 300 ரூபாய் பணத்துடன் வந்தவர் இன்று 300 கோடிக்கு மேல் வசூல் ஈட்டும் படத்தின் நாயகனாக உயர்ந்துள்ளார். அவர் நடித்துள்ள கே.ஜி.எஃப் 2 திரைப்படம் 5 நாட்களில் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... KGF 2 : திருமண அழைப்பிதழில் ‘கே.ஜி.எஃப் 2’ டயலாக்.... மாப்ள வெறித்தனமான ரசிகனா இருப்பாரு போல..!