தமிழில் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக 'இது என்ன மாயம்' படத்தில் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இந்தப் படம் தோல்வியை சந்தித்தாலும் , இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இவர் நடித்த, 'ரஜினிமுருகன்' மற்றும் 'ரெமோ' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றது.
அதே நேரம் கீர்த்தி சுரேஷின் தனித்துவமான நடிப்பு திறமையை வெளிக்கொண்டு வந்த திரைப்படம் என்றால், அது 'மகாநடி' திரைப்படம் தான். நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து உருவான இந்த படத்தில் அச்சு அசல், சாவித்திரியாகவே வாழ்ந்து நடித்திருந்தார் என்று கூறும் அளவிற்கு விமர்சனங்கள் கிடைத்தது. இந்த படத்திற்காக, கீர்த்தி சுரேஷ் தேசிய விருதையும் வென்றார்.
இந்த படத்துக்கு பின்னர் அவருக்கு தெலுங்கில் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. அங்கு சிரஞ்சீவி, மகேஷ் பாபு போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், அவ்வப்போது தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில், தமிழில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் அண்ணாத்த.
சிவா இயக்கத்தில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியான இப்படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ். இதுதவிர நயன்தாரா, குஷ்பு, மீனா, சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தாலும், இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. கலவையான விமர்சனங்களையும் பெற்றது.
இந்நிலையில், இந்த படத்தில் ரஜினியுடன் நடிப்பதற்காக நடிகை கீர்த்தி சுரேஷ் 2 பிரம்மாண்ட படங்களின் வாய்ப்பை நழுவவிட்டுள்ளார். அவற்றுள் ஒன்று, சமீபத்தில் நானி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ஷ்யாம் சிங்கா ராய். இதில் சாய் பல்லவி கேரக்டரில் முதலில் கீர்த்தி தான் நடிப்பதாக இருந்தார். மற்றொரு படம் மணிரத்னத்தின் பிரம்மாண்ட படைப்பான ‘பொன்னியின் செல்வன்’. அண்ணாத்தைக்காக அவர் இந்த இரண்டு பட வாய்ப்புகளையும் உதறித்தள்ளியது கொஞ்சம் ஓவர் தான் என கோலிவுட் வாட்டாரத்தில் முணுமுணுக்கின்றனர்.