Published : Jun 12, 2026, 12:20 PM ISTUpdated : Jun 12, 2026, 12:22 PM IST
Karuppu Movie OTT Release : ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா ஹீரோவாக நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆன கருப்பு திரைப்படம், தியேட்டரில் அள்ளிய வசூல் எவ்வளவு என்பதை பார்க்கலாம்.
சூர்யா நடிப்பில் கடந்த மே மாதம் 15-ந் தேதி திரைக்கு வந்த படம் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜி இயக்கிய இப்படத்தில் சூர்யா உடன் திரிஷா, இந்திரன்ஸ், சுவாசிகா, நட்டி நட்ராஜ், தீபா, ஜார்ஜ் மரியான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. கருப்பு திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருந்தார். அவர் இசையமைப்பாளராக கமிட்டான முதல் படம் இதுவாகும். இப்படத்தின் வெற்றிக்கு சாய் அபயங்கரின் இசை மற்றும் பாடல்களும் முக்கிய பங்காற்றி இருந்தன. கருப்பு திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக எஸ்.ஆர்.பிரபு தயாரித்து இருந்தார்.
கருப்பு திரைப்படத்தின் கதை முதன்முதலில் தளபதி விஜய்க்கு தான் சொல்லப்பட்டது. அவர் அரசியலுக்கு சென்றுவிட்டதால், அப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. அதனால் அந்த கதையை கொஞ்சம் பட்டி, டிங்கரிங் பார்த்து சூர்யாவிடம் சொல்லி இருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி. அவர் சொன்ன உடனே சூர்யாவுக்கு மிகவும் பிடித்துப் போக, அவரும் உடனே ஓகே சொல்லிவிட்டார். இதையடுத்து ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி படத்தின் படப்பிடிப்பை கோவையில் நடத்தினர். அங்குள்ள விவசாய கல்லூரியில் தான் கருப்பு படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டது.
கருப்பு திரைப்படம் பல்வேறு தடங்கல்களை தாண்டி மே 15ந் தேதி திரைக்கு வந்தது. ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே பாசிடிவ் விமர்சனங்களை பெற்ற இப்படம், தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கேரளா போன்ற பிற மாநிலங்களிலும் சக்கைப்போடு போட்டது. நடிகர் சூர்யாவிற்கு தரமான கம்பேக் படமாக அமைந்ததோடு, பாக்ஸ் ஆபிஸிலும் 300 கோடிக்கும் மேல் வசூலை வாரிக்குவித்தது. இப்படம் நடிகர் சூர்யாவின் கெரியரில் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையை படைத்துள்ளது. இது உலகளவில் 340 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றிநடை போட்டு வருகிறது.
கருப்பு திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் செம குஷியில் இருக்கிறார் சூர்யா. சுமார் 10 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் அவருக்கு இந்த வெற்றி கிடைத்துள்ளது. இந்த வெற்றியை அடுத்து, கருப்பு படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் மற்றும் படத்தொகுப்பாளர் ஆகியோர் மஹிந்திரா BE6 பேட்மேன் எடிசன் காரை பரிசளித்திருந்தார் சூர்யா. அதுமட்டுமின்றி படத்தின் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜிக்கும் விலையுயர்ந்த சொகுசு கார் ஒன்றை பரிசாக வழங்கியதோடு, அந்த காரில் ஒரு ரெய்டும் சென்றிருக்கிறார்.
திரையரங்குகளில் பிரம்மாண்ட வெற்றியை ருசித்த கருப்பு திரைப்படம் தற்போது ஓடிடிக்கு வந்துள்ளது. அப்படம் இன்று முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. தியேட்டரில் அமோக வரவேற்பை பெற்ற கருப்பு திரைப்படத்திற்கு ஓடிடியிலும் செம ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. இப்படம் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் இன்று ஓடிடியில் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படம் ஓடிடியில் என்னென்ன சாதனை படைக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.