நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்தாண்டு சுல்தான் படம் ரிலீசானது. அதன்பின் ஒன்றரை ஆண்டு இடைவெளிக்கு பின் அவர் நடிப்பில் வெளியாகி உள்ள படம் விருமன். முத்தையா இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் கார்த்தி கிராமத்து நாயகனாக நடித்துள்ளார். கொம்பன் வெற்றிக்கு பின் முத்தையாவும், கார்த்தியும் இணைந்துள்ள படம் என்பதால் விருமனுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.
விருமன் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிறார் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி. இப்படத்தில் கார்த்தியுடன் சிங்கம்புலி, இளவரசு, வடிவுக்கரசி, பிரகாஷ்ராஜ், சூரி, சரண்யா பொன்வண்ணன், ஆர்.கே.சுரேஷ், இந்திரஜா ரோபோஷங்கர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
விருமன் படத்துக்கு அதிகாலை 4 மணி காட்சி திரையிட அனுமதி கிடைக்காததால், பெரும்பாலான இடங்களில் 6 மணிக்கு மேல் தான் முதல் காட்சி திரையிடப்பட்டன. சில இடங்களில் ரசிகர்கள் அதிகாலையில் படம் எப்படியாவது ரிலீஸ் ஆகிவிடும் என ஆவலோடு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற நிகழ்வுகளும் அரங்கேறின.