
கோலிவுட்டில் நடிப்பின் நாயகனாக கொண்டாடப்படுபவர் சூர்யா. இவரின் சினிமா பயணம் என்பது கடுமையான சவால்கள் நிறைந்ததாகவே இருந்துள்ளது. ஆரம்பத்தில் சினிமாவில் அறிமுகமானபோது, நடிக்கவே வரவில்லை, நடனமாட தெரியவில்லை என பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டார் சூர்யா. பின்னர் படத்துக்கு படம் தன்னை மெருகேற்றிக் கொண்ட சூர்யா, எதை தனது நெகடிவ் ஆக சொன்னார்களோ, அதையே பாசிட்டிவ் ஆக மாற்றிக் காட்டினார்.
நடிக்க வராது என விமர்சித்தவர்கள் முன்னிலையில், தன்னைவிட சிறந்த நடிகன் இல்லை என சொல்லும் அளவுக்கு முன்னேறிக் காட்டிய சூர்யா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் வென்று அசத்தினார். சூரரைப் போற்று படத்திற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது. சூர்யாவுக்கு பின் சினிமாவில் அறிமுகமான சிவகார்த்திகேயன், தனுஷ் ஆகியோர் அவரை மிஞ்சும் அளவுக்கு அடுத்தடுத்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படங்களை கொடுத்து வருகின்றனர்.
ஆனால் நடிகர் சூர்யாவுக்கு பாக்ஸ் ஆபிஸ் வெற்றி என்பது கடந்த 10 ஆண்டுகளாக ஒரு பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கூட இல்லை என்று சொன்னால் நம்ப முடிகிறதா... ஆனால் அது தான் நிஜம். சூர்யா கடைசியாக பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் கடந்த 2013-ம் ஆண்டு வெளிவந்த சிங்கம் 2. அப்படத்திற்கு பின் கடந்த 10 ஆண்டுகளில் அவர் ஒரு பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படத்தை கூட கொடுக்கவில்லை. இது அவரின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக உள்ளது.
இதையும் படியுங்கள்... அடுத்த அஞ்சான் ரேஞ்சுக்கு ட்ரோல் செய்யப்படும் கங்குவா! முதல் நாள் வசூலே இத்தனை கோடியா?
சூர்யாவின் சமகால நடிகர்களான விஜய், அஜித் ஆகியோர் இன்று 100 கோடி, 200 கோடி என சம்பளம் வாங்கி வரும் நிலையில், சூர்யா இன்னும் 50 கோடியை எட்டுவதே மிக கடினமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் அவர் படங்களின் தொடர் தோல்விகள் தான். இந்த 10 ஆண்டுகளில் சூர்யா வெறும் இரண்டு ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். அவை சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம். ஆனால் அதுவும் நேரடியாக ஓடிடி ரிலீஸ் ஆன படங்கள். இவை இரண்டும் தியேட்டரில் ரிலீஸ் ஆகி இருந்தால் சூர்யாவின் மார்கெட் எகிறி இருக்கும்.
சிங்கம் 2 படத்துக்கு பின் சூர்யா நடித்த அஞ்சான், மாஸ், பசங்க 2, 24, சிங்கம் 3, தானா சேர்ந்த கூட்டம், என்.ஜி.கே, காப்பான், எதற்கும் துணிந்தவன், கங்குவா ஆகிய 10 படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆகின. இந்த 10 படங்களுமே பாக்ஸ் ஆபிஸ் ரீதியாக தோல்வி படங்களாக அமைந்தன. இதில் எதற்கும் துணிந்தவன், பசங்க 2 தவிர மற்ற படங்கள் அனைத்துமே அவர் வெவ்வேறு இயக்குனர்கள் இயக்கத்தில் நடித்த படம். அதுவும் பிரபலமான இயக்குனர்கள் இயக்கத்தில் நடித்த படங்கள்.
இப்படி தொடர்ச்சியாக 9 பிரபல இயக்குனர்களுடன் பணியாற்றியும் சூர்யாவால் வெற்றியை பெற முடியாததற்கு அவரின் கதைத் தேர்வு தான் ஒரு முக்கிய காரணமாக இருந்துள்ளது. மற்றபடி நடிப்பில் அவர் தன்னுடைய 100 சதவீதத்தை கொடுத்தாலும் கதை இல்லையென்றால் எந்தபடமும் எடுபடாது. அதற்கு சிறந்த உதாரணம் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான கங்குவா படம். இப்படத்திற்காக 2 ஆண்டுகள் கடினமாக உழைத்தார் சூர்யா. அந்த உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்காமல் போனது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இனி அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆக உள்ள அவரின் 44-வது படம் மூலம் வெற்றியை கொடுப்பார் என சூர்யாவை போல நம்பிக்கையுடன் அவரது ராசிகர்களும் காத்திருக்கின்றனர்.
இதையும் படியுங்கள்... டாப் மோஸ்ட் நடிகை நயன்தாரா கூட இல்ல; ஒரு பாட்டுக்கு 21 முறை காஸ்டியூம் சேஞ்சா? கங்குவா நடிகையின் சுவாரஸ்யம்!