
அதிக பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் அல்லது உச்ச நடிகர்களின் படங்கள் தீபாவளி, பொங்கல், தமிழ் புத்தாண்டு போன்ற தமிழ் பண்டிகைகளில் வெளியிடப்படுகின்றன. இதற்குக் காரணம், விடுமுறை நாட்கள் திரையரங்குகள் 3 முதல் 4 நாட்களுக்கு அதிக வசூலைப் பெற உதவுவதால், தயாரிப்பாளர்களுக்கு இது முக்கிய இலக்காக செயல்படுகிறது.
அந்த வகையில் பல்வேறு நடிகர்களின் படங்கள் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி உள்ளன. அதில் பொங்கல் பண்டிகைக்கு வெளியான கமல்ஹாசன் படங்கள் என்னென்ன? இதில் எந்தெந்த படங்கள் வெற்றி பெற்றன? எவை தோல்வி அடைந்தன என்று தற்போது பார்க்கலாம்.
நீயா :
1979-ம் ஆண்டு துரை இயக்கத்தில் வெளியான படம் நீயா. இந்த படத்தில் கமல், ஸ்ரீபிரியா, ஜெய் கணேஷ், விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சங்கர் கணேஷ் இசையமைத்திருந்த இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. 1976-ம் ஆண்டு ஹிந்தியில் வெளியான நாகின் படத்தின் ரீமேக்காக வெளியான இந்த படம் தமிழிலும் மிகப்பெரிய ஹிட் ஆனது. விமர்சன் ரீதியாகவும், வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
மீண்டும் கோகிலா :
1981 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி வெளியான படம் மீண்டும் கோகிலா. ஜி.என். ரங்கராஜன் இயக்கிய இந்த படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, தீபா தேங்காய் ஸ்ரீனிவாசன் ஆகியோர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்த இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. இந்த படம் மிகப்பெரிய ஹிட்டானது. விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
ஒரு கைதியின் டைரி
1985-ம் ஆண்டு வெளியான படம் ஒரு கைதியின் டைரி. பாக்யராஜ் கதை எழுதிய இந்த படத்தை பாரதி ராஜா இயக்க் இருந்தார். இந்த படத்தில் கமல்ஹாசன், ரேவதி மற்றும் ராதா ஆகியோர் நடித்திருந்தனர். இளையராஜா படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படம் 175 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது.
காதல் பரிசு
1987-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி ஏ. ஜெகன்னாதன் இயக்கத்தில் வெளியான படம் காதல் பரிசு. இந்த படத்தில் கமல்ஹாசன், ராதா, அம்பிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படமும் வணிக ரீதியில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.
மகாநதி
1994-ம் ஆண்டு பொங்கல் ரிலீஸாக வெளியான படம் மகாநதி. கமல்ஹாசன் கதை எழுதி இருந்த இந்த படத்தை சந்தான பாரதி இயக்கி இருந்தார். இந்த படத்தில் கமல்ஹாசன், சுகன்யா, எஸ்.என். லட்சுமி, பூர்ணம் விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை இந்த படம் பெற்றது. இந்த படத்திற்கு 2 தேசிய விருதுகள் உட்பட பல விருதுகள் கிடைத்தன.
சதிலீலாவதி
1995-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியான படம் சதிலீலாவதி. அனந்து கதை எழுதி இருந்த இந்த படத்தை பாலு மகேந்திரா இயக்கி இருந்தார். இந்த படத்தில் கமல்ஹாசன், கோவை சரளா, ரமேஷ் அரவிந்த், கல்பனா, ஹீரா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கிரேஸி மோகன் வசனம் எழுதி இருந்த இந்த படம் காமெடி படமாக வெளியானது. இந்த படமும் வணிக ரீதியில் வெற்றி பெற்ற படமாக அமைந்தது.
பம்மல் கே சம்மந்தம்
2002-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி மௌலி இயக்கத்தில் வெளியான படம் பம்மல் கே. சம்மந்தம். கமல்ஹாசன், சிம்ரன், அப்பாஸ், சினேகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் வணிக ரீதியான வெற்றி படமாக அமைந்தது.
விருமாண்டி
2004-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி விருமாண்டி' படம் வெளியானது. கமல்ஹாசன் எழுதி, இயக்கி நடித்திருந்த இந்த படத்தில் பசுபதி, அபிராமி, நெப்போலியன், ரோகிணி மற்றும் நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் முதலில் 'சண்டியர்' என்ற தலைப்பில் தொடங்கப்பட்டது, ஆனால் பின்னர் மாற்றப்பட்டது. இந்த படம் ஹாபிடேட் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. மேலும் சிறந்த ஆசிய படத்திற்கான சர்வதேச விருதை வென்றது. இந்த படம் ஓரளவு ஹிட்டானது.
அன்பே சிவம்
2003 பொங்கல் பண்டிகையின் போது வெளியான படம் அன்பே சிவம். கமல்ஹாசன் கதை எழுதி இருந்த இந்த படத்தை சுந்தர் சி இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் கமல்ஹாசன், மாதவன், நாசர் மற்றும் கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளில் சிறப்பு நடுவர் விருதை வென்றது, கமல்ஹாசன் சிறந்த நடிகருக்கான விருதையும், மாதவன் SICA விருதுகள் மற்றும் தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த துணை நடிகருக்கான விருதுகளையும் வென்றார்.
இந்தப் படம் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்டது. கமல்ஹாசனின் பல ரசிகர்களால் விரும்பப்பட்டது. எனினும் இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி படமாக மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.