கடந்த 2004ஆம் ஆண்டு, இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் வெளியான திரைப்படம் 'காதல்'.
சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் இந்த படத்தில் நடித்த பரத், சந்தியா ஆகியோருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
இந்த படத்தில் ஒரு சிறிய காமெடி வேடத்தில் நடித்திருந்தனர் பல்லு பாபு.
சினிமாவில் ஹீரோவாக ஆசைப்படும் இவர், முதலில் ஹீரோ, அப்புறம் வில்லன், அப்புறம் சி.எம், அப்புறம் பிரைம் மினிஸ்டர் இதான் என்னோட பிளான் என்று அவர் சொல்லும் வசனம் மிகவும் பிரபலம்.
இந்த படத்தை தொடர்ந்து, மற்ற சில படங்களிலும் சிறிய வேடத்தில் நடித்துள்ளார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளாகவே சரியான படவாய்ப்புகள் இல்லாததாலும், தன்னுடைய தாய், தந்தை இருவருமே அடுத்தடுத்து இறந்ததால் ஏற்பட்ட மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு கோவிலில் பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்தார்.
பின்னர் இவரை பற்றி சமூக வலைத்தளத்தில் வெளியான செய்தியை அறிந்து, நடிகர் சாய் தீனா, இயக்குனர் மோகன், அபி சரவணன், ஆகியோர் அவரை மீட்டு, அவருக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்தனர்.
இந்நிலையில் லாக் டவுன் பிரச்சனை மீண்டும் பல்லு பாபு வாழ்க்கையில் இடியாக இறங்கியது. இதனால் சரியான தங்குமிடம், சரியான உடை, போன்ற எதுவும் இல்லாமல் தெருவில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இவர் நேற்று முன்தினம் இரவு ரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழுதடைந்த ஆட்டோ ஒன்றில் படுத்து தூங்கியுள்ளார். அப்போது அதே ஆட்டோவில் உயிரிழந்துள்ளார் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இவரது இறப்பிற்கான உண்மையான காரணம் இதுவரை தெரியவில்லை. சரியான பட வாய்ப்பு இல்லாததாலும், பெற்றோரை இழந்ததாலும் நடிகர் ஒருவர், நடுத்தெருவில் ஆட்டோவிலேயே இறந்த சம்பவம் நெஞ்சை உலுக்கும் விதத்தில் அமைந்துள்ளது.