
Jayam Ravi Brother Movie Review: ஏன், எதற்கு, எப்படி என்று கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தால் தான் அறிவு வளரும் பள்ளி பருவத்தில் ஆசிரியர் கற்றுக் கொடுக்க அதையே வேத வாக்காக எடுத்து அவரிடமே கேள்வி கேட்டு திட்டும் வாங்குகிறார் கதையின் நாயகன் கார்த்திக் (ஜெயம் ரவி). அங்கே முடிந்தால் சட்டக்கல்லூரி தேர்வுக்கு வருகிறார். அங்கு சட்டக்கல்லூரி மாணவருக்கு கல்லூரி பேராசிரியரே தேர்வு எழுத அதனை தனது செல்போனில் வீடியோ எடுத்து மீடியாவுக்கு அனுப்புவேன் என்று சொல்ல,வேண்டாம் இது பெரிய இடத்து விவகாரம் என்று பேராசிரியர் சொல்ல, இறுதியில் தேர்வும் எழுதாமலும், படிப்பை முடிக்காமலும் வெளியில் வருகிறார்.
குடியிடிருக்கும் அரசு குடியிருப்பு வளாகம் கட்டி 30 வருடங்கள் ஆன நிலையில் அதனை இடிக்க அரசு நோட்டீஸ் வாங்குகிறார். ஆனால், குடியிருப்பு வாசிகளுக்கு அது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த, அசோசியேஷன் மூலமாக அனைவரும் ஒன்று சேர்ந்து கார்த்திக்கிடம் சண்டைக்கு செல்ல கடைசியில் காவல் துறை வரை செல்கிறார். எங்கு தன்னையும் தனது மனைவியையும் நடுத்தெருவில் நிறுத்திவிடுவானோ என்று ஆதங்கத்தில் ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியரான குமாரசாமிக்கு (அச்யுத் குமார்) நெஞ்சு வலி வந்து மருத்துவனையில் அனுமதிக்கப்படுகிறார்.
இதையடுத்து ஊட்டியில் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்த கார்த்திக்கின் அக்கா ஆனந்தி மருத்துவமனைக்கு வருகிறார். மகனால் தனக்கு ஏதாவது நேர்ந்துவிடுமோ என்று பதற்றமடையும் அப்பா, கார்த்திகை ஆனந்தியுடன் அனுப்பி வைக்கிறார். அப்பாவின் நன்மைக்காவும், அக்காவின் விருப்பத்திற்காகவும் கார்த்திக் ஊட்டிக்கு செல்கிறார்.
அங்கு அட்டவணை போட்டு வாழும் அக்கா ஆனந்தியின் குடும்பத்தினரை சந்திக்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தான் பிரதர் படத்தின் மீதிக் கதை. ஒருகட்டத்தில் சண்டையால் ஆனந்தி, தனது தம்பி கார்த்திக், மகன் அர்ஜூன் (மாஸ்டர் அஸ்வின்), மகள் அபி (விஆர் ரிதி) ஆகியோருடன் வீட்டை விட்டு செல்கிறார்.
அதன் பிறகு அவர்களது குடும்பம் ஒன்று சேர்ந்ததா? எதற்கெடுத்தாலும் சட்டம் பேசிக்கிட்டு இருக்கும் கார்த்திக் அதன் பிறகு திருந்தினாரா இல்லை? என்பதை குடும்பக் கதையாக சுவாரஸ்யமாக் காட்டியிருக்கிறார் இயக்குநர் எம் ராஜேஷ். குடும்பக் கதை, ஈகோ பிரச்சனைகளை மையப்படுத்தி எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் வித்தியாசமான காட்சி, காமெடிக் கதையோடு இன்றைய தலைமுறையினருக்கு தெளிவாக காட்டியிருக்கிறார் இயக்குநர் ராஜேஷ்.
கார்த்திக் கதாபாத்திரத்தில் ஒட்டு மொத்த படத்தையும் தாங்கியிருக்கிறார் ஜெயம் ரவி. தம்பி மீது அளவுகடந்த பாசத்தில் ஒரு அப்பாவையும் மிஞ்சிய நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் பூமிகா சாவ்லா.
பூமிகாவின் கணவராக நடித்த நடராஜன் துடிப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கோபமான காட்சியாக இருந்தாலும் சரி, பாசத்தை வெளிப்படுத்தும் சரி பிரமாதமான நடிப்பு. மாமியாராக நடித்த சரண்யா பொன்வண்ணன் அந்த ரோலுக்கு கொஞ்சம் ஓவராக நடித்திருக்கிறார் என்று தோன்றுகிறது. மாமனார் ஐஏஎஸ் அதிகாரியான ராவ் ரமேஷ் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
ஹீரோயின் பிரியங்கா மோகன் சொல்லவே வேணாம் எல்லா இடங்களிலும் பட்டைய கிளப்பியிருக்கிறார். காமெடி, ரொமான்ஸ், செண்டிமெண்ட் என்று எல்லா இடத்திலும் கிளாப்ஸ் வாங்கியிருக்கிறார். ஜெயம் ரவி மற்றும் விடிவி கணேஷ் காம்பினேஷன் பக்காவா இருக்கு. காமெடிக்கு பஞ்சமில்லை.
டாக்டராக ஒரு சீசனுக்கு வந்த எம்.எஸ்.பாஸ்கர் மனதில் நிற்கிறார். விடிவி கணேஷை வைத்து கூட்டும் அலப்பறைகள் வயிறு வலிக்க செய்கிறது. திரும்ப திரும்ப பார்க்க தோன்றும் காட்சிகள் படத்திற்கு ப்ளஸாக அமைந்துள்ளன. படம் மெதுவாக சென்றாலும் ஆழமான கருத்தை எடுத்துச் சொல்கிறது.
ஹரிஷ் ஜெயராஜ் இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. படம் முழுவதும் மக்காமிஷி பாடல் டிராவல் செய்கிறது. ஆரம்பித்த இடத்திலேயே வந்து படத்தை முடித்திருக்கிறார் இயக்குநர். படம் பக்கா மாஸ். குடும்ப சென்டிமெண்ட். பிளஸாக நிறைய விஷயத்தை சொல்லலாம். மைனஸ் என்று பார்த்தால் மெதுவாக டிராவல் பண்ணுவது தான். மொத்தத்தில் பிரதர் சுவாரஸ்யம் - இனிமை.