
இன்ஸ்டாகிராம் என்கிற சோசியல் மீடியா தளம் தற்போது இளம் தலைமுறையினரின் வாழ்க்கையில் ஒரு அங்கமாகிவிட்டது என்றே சொல்லலாம். இன்ஸ்டா பார்க்காத இளைஞர்களே இருக்க முடியாது. அந்த அளவுக்கு அதில் பதிவிடப்படும் ரீல்ஸ் வீடியோக்கள் பலரையும் அடிமையாக்கி வைத்துள்ளது. அப்படி சமீப காலமாக ஒரு வெளிநாட்டு இளைஞர் ஒருவர் கட்டுமஸ்தான் உடற்கட்டுடன் தன்னுடைய தினசரி வாழ்க்கையை வீடியோவாக எடுத்துப் போட்டு அதன் மூலம் உலகளவில் பேமஸ் ஆகி இருக்கிறார். அவர் பெயர் ஆஸ்டன் ஹால் அவரைப் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.
ஆஸ்டன் ஹால் 1995-ம் ஆண்டு அக்டோபர் 24ந் தேதி அமெரிக்காவில் பிறந்தநார். இவர் கல்லூரியில் படிக்கும்போது கால்பந்து விளையாட்டில் சிறந்து விளங்கினார். 2014 முதல் 2015ம் ஆண்டு வரை கல்லூரியில் கால்பந்து வீரராக பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வந்தார். ஒரு கட்டத்தில் காயம் ஏற்பட்டதால் கால்பந்து விளையாட்டை விட்டுவிட்டு, பிட்னஸ் பக்கம் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்த தொடங்கினார் ஆஸ்டன் ஹால். கல்லூரிப் படிப்பை முடித்தபின்னர் ஜிம் பயிற்சியாளராக பணியாற்றி வந்தார் ஆஸ்டன் ஹால்.
2020-ம் ஆண்டு ஏ.எஸ்.ஜிம் பிட்னஸ் என்கிற ஆன்லைன் ஜிம் பயிற்சி தளத்தை தொடங்கினார். உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு, வாழ்க்கை முறை ஆகியவற்றை சரியாக கடைபிடித்து வரும் ஆஸ்டன் ஹால், 2025-ம் ஆண்டு இன்ஸ்டாவில் வெளியிட்ட தன்னுடைய வாழ்க்கை முறை குறித்த வீடியோ இன்ஸ்டாவில் 250 மில்லியன் பார்வைகளை பெற்றது. அந்த வீடியோவில் வாயை டேப் போட்டு தூங்குவது, ஐஸ் பாத் எடுப்பது, முகத்திற்கு வாழைப்பழ தோலை பயன்படுத்துவது என அவர் செய்யும் விஷயங்கள் பலரையும் வியப்பூட்டியது.
மேலும் அவர் தனது வீடியோவில் Saratoga என்கிற பிராண்டின் தண்ணீரை தான் குடிப்பதற்கும், முகம் கழுவுவதற்கு பயன்படுத்துவார். அவரால் அந்த தண்ணீர் பிராண்டும் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டது. இவரின் வீடியோவை பார்த்து அதை பலரும் ரீ-கிரியேட் செய்து இன்ஸ்டாவில் டிரெண்டாகி வருகிறார்கள். இந்தியாவிலும் ஆஸ்டன் ஹாலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இதை அறிந்த ஆஸ்டன் ஹால் அண்மையில் இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார்.
ஆஸ்டன் ஹாலின் வீடியோக்கள் அசால்டாக 100 மில்லியன் பார்வைகளை பெற்றுவிடுகின்றன. அவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 1.7 கோடி ஆகும். தினமும் காலை 4 மணிக்கு எழுந்து தன்னுடைய பிட்னஸ் வாழ்க்கையை தொடங்கும் ஆஸ்டன் ஹால், இரவு 7 மணிக்கெல்லாம் தூங்கிவிடுவார். இவருக்கு சொந்தமாக ரோல்ஸ் ராய்ஸ் உள்ளிட்ட சொகுசு கார்களும் உள்ளன. ஆன்லைன் மூலமாக உடற்பயிற்சி ஆலோசனைகளை வழங்குவது, உடற்பயிற்சிக்கு தேவையான சப்ளிமெண்டுகளை விற்பனை செய்வது என பல தொழில்களை ஆஸ்டன் ஹால் செய்து வருகிறார்.
ஆஸ்டன் ஹாலின் சொத்து மதிப்பு மட்டும் 15 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இவர் மாதம் 75 லட்சம் முதல் 1 கோடி வரை சம்பாதித்து வருகிறாராம். இவருக்கு யூடியூப்பில் 39 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் இருக்கிறார்கள். அதன் மூலமும் வருவாய் ஈட்டி வருகிறார். அவரின் வீடியோவை பார்க்கும் பலரும் வியந்து பார்ப்பது அவரின் உழைப்பு தான். தினசரி காலை 4 மணிக்கு எழுந்து தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்காக மிகவும் சிரத்தை எடுத்து செய்யும் ஒவ்வொரு செயல்கள் தான் இன்று அவரை உச்சத்துக்கு கொண்டு சென்று இருக்கிறது.