
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர அந்தஸ்தை அடைந்துவிட வேண்டும் என்பது தான் நடிகர்களின் கனவாக இருக்கும். அந்த கனவு நனவாக நகைச்சுவை உணர்வு கைகூட வேண்டும் என்பது தான் தமிழ் சினிமாவின் நிதர்சனம். ரசிகர்களை கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு ஈர்க்கும் ஆற்றல் நகைச்சுவைக்கு மட்டுமே உள்ளது. இதன் காரணமாகவே நடிகர்கள் ஆக்சன், நடிப்பு, நடனம் என எல்லாவற்றிலும் கைதேர்ந்தவராக இருந்தாலும், நகைச்சுவை என்னும் கலையை தன்னுள் வளர்த்துக்கொள்ள தவம் கிடக்கிறார்கள்.
அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் அந்தஸ்து பெற்று உச்சத்தை தொட்டுவிட்ட போதும் தன் திரைப்படங்களில் வெள்ளந்தியாக நகைச்சுவை செய்வதை ஒரு நாளும் கைவிட்டது இல்லை. கழுத்தில் பாம்பை வைத்துக்கொண்டு ரஜினி செய்யும் சேட்டைகளை யாராலும் மறந்து இருக்க முடியாது. இதே போல படையப்பா திரைப்படத்தில் தான் ஒரு மாஸ் ஹீரோ என்ற போதும் கூட நடிகர் செந்திலுடன் இணைந்து படம் முழுக்க காமெடி செய்திருப்பார் ரஜினிகாந்த்.
சூப்பர்ஸ்டாரின் இந்த அணுகுமுறையை பின்பற்றியே நடிகர் விஜய்யின் திரைப்பயணத்திலும் நகைச்சுவைக்கும் முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளது. நடிப்பில் பாஸ் மார்க் வாங்கிய கையோடு நகைச்சுவையிலும் தன்னை பட்டை தீட்டிக்கொண்டே வந்துள்ளார் விஜய். அந்த வகையில் சார்லி முதல் யோகி பாபு வரை பல முன்னணி நகைச்சுவை நடிகர்களோடு விஜய் நடித்து விட்டாலும் சிரிப்பு அரசன் வடிவேலுவுடன் அவர் இணையும் போது அந்த நகைச்சுவை காட்சிகள் கூடுதலாக வசீகரிக்கும். அந்த வகையில் விஜய் - வடிவேலு என்னும் கூட்டணியின் சிறப்பை அலசும் ஒரு சிறப்பு தொகுப்பு தான் இது.
விஜய்யும் வடிவேலுவும் காமெடியில் கதகளி ஆடிய முதல் திரைப்படம் என்றால் அது பிரண்ட்ஸ் திரைப்படம் தான். மலையாள இயக்குனர் ஃபாசில் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் முழு நீள நகைச்சுவை படமாக அமைந்திருந்தது. இந்த திரைப்படத்தில் ஏற்கனவே மூன்று நாயகர்கள் இருந்தபோதிலும். வடிவேலுவுக்கும் இதில் சரிசமமான ஒரு கதாபாத்திரம் வழங்கப்பட்டு இருக்கும். இதை உணர்ந்த விஜயும் வடிவேலு ஸ்கோர் செய்ய வேண்டிய இடங்களில் எல்லாம் முழு ஒத்துழைப்பு வழங்கி இருப்பார். வடிவேலுவுடன் தோன்றும் காட்சிகளில் தன் பங்கிற்கு ரசிகர்களாஇ சிரிக்க வைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை அளந்து செய்திருந்த விஜய், படம் முழுக்க வடிவேலு செய்யும் கோமாளித்தனங்களில் ரசிகர்கள் சிரித்துக் கொண்டிருக்க, விஜய்யும் தன் பங்கிற்கு சிரித்த சிரிப்பையும் யாராலும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.
பகவதி திரைப்படத்தில் விஜய் வைத்திருக்கும் டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை பார்க்கும் வடிவேலுவுடன் விஜய் போராடும் காட்சிகள் ஒவ்வொன்றும் இன்றும் ரசிகர்கள் நினைத்து பார்த்து சிரிக்கும் ரகம். தான் வேலை பார்க்கும் கடைக்கு தனது சொந்த ஊர்க்காரர் வந்துவிட, அந்த குஷியில் அவருக்கு இலவசமாக டீ ஆபர் கொடுப்பார் வடிவேலு. ஆனால் அவர் ஒரு ஊரையே கூட்டி வந்து கடையை காலி செய்யும் போது வடிவேலு கொடுக்கும் ரியாக்ஷனும் அவருக்கு விஜய் கொடுக்கும் தண்டனையும் இந்த ஜோடியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது என்றே சொல்ல வேண்டும். விஜய் - வடிவேலு கூட்டணி உச்சம் தொட்ட திரைப்படம் என்றால் அது வசீகரா. இத்திரைப்படத்தில் ஆரம்பத்தில் வடிவேலுவிடம் பம்புவதும் பின்னர் வடிவேலுவை மிரட்டுவதும் என சேட்டை கூட்டி இருப்பார் விஜய்.
இந்த காலகட்டத்தில் வடிவேலு - பார்த்திபன் ஜோடிக்கு இணையாக வடிவேலு - விஜய் இணை நகைச்சுவையில் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஒரு கட்டத்தில் விஜய் படம் வணிக அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் அதில் இடம்பெற்ற பாடல்களும் நகைச்சுவை காட்சிகளும் ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற தொடங்கியது. அதற்கு மிகச் சிறந்த உதாரணம் வசீகரா. இப்படம் வணிக ரீதியாக தோல்வியை சந்தித்தது. ஆனால் இதன் நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் தொலைக்காட்சிகளிலும், யூடியூப்பிலும் ரசிகர்களின் கவலைக்கு மருந்தாக மாறி வருகிறது. கில்லி படத்தின் வெற்றிக்கு பின் விஜய் படங்களில், நகைச்சுவை கட்டாயம் இடம் பெற வேண்டும் என்கிற சூழல் உருவானது.
இதன் காரணமாகவே மதுர போன்ற திரைப்படங்களில் கதைக்களம் ஆக்சன் ஆக உருவாக்கப்பட்டிருந்தாலும் காமெடி காட்சிகள் எண்ணிக்கை அதிகம் இடம் பெற்றிருக்கும். அதிலும் குறிப்பாக விஜயின் மாஸ் படம் என்றால் அதில் கட்டாயம் வடிவேலுவின் காமெடி இருக்கும் என்பது மதுர திரைப்படம் உணர்த்தியது. தொடர்ந்து ஆக்சன் மசாலா படங்களில் நடித்து வந்த விஜய் நீண்ட இடைவெளிக்கு பிறகு நகைச்சுவை கலந்த காதல் கதையில் நடித்த படம் சச்சின். இதில் அய்யா சாமியாக ஒரே வகுப்பில் ஒன்பது வருடமாக படிக்கும் கல்லூரி மாணவராக வடிவேலுவும், அதே கல்லூரியில் புதிதாக சேர்ந்து இருக்கும் மாணவராக விஜய்யும். காட்சிக்கு, காட்சி நகைச்சுவை செய்து சிரிக்க வைத்திருப்பார்கள். ஜெனிலியாவிடம் வடிவேலுவை மாட்டிவிடும் காட்சிகளில், காமெடி சிக்சர்களை அவுட் ஆஃப் தி ஸ்டேடியம் வரை பறக்க விட்டிருப்பார் சச்சின். இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை தவிர மற்ற எல்லா காட்சியும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்கும் வண்ணம் உருவாக்கி இருப்பார் இயக்குனர் ஜான் மகேந்திரன்.
இதை உணர்ந்த விஜய்யும், வடிவேலுவும் காமெடியில் கூட்டணி போட்டு இரட்டை சதம் அடித்து அசத்தி இருப்பார்கள். விஜய் வடிவேலு கூட்டணிக்கு கிடைத்த அதிரிபுதிரி வரவேற்பை தொடர்ந்து, கதைப்படி இவர்கள் இருவருக்கும் காம்பினேஷன் காட்சிகள் இல்லை என்றாலும் வடிவேலுக்கு தனி ட்ராக் கொடுத்து அவரை எப்படியாவது விஜய் படத்தில் ஒப்பந்தம் செய்துவிடுவது தயாரிப்பாளர்களின் வழக்கம். அப்படித்தான் போக்கிரி படத்தில் வடிவேலுவுக்கு பெரிதாக விஜயுடன் பயணிக்கும் காட்சிகள் இல்லை என்றாலும் தனி டிராக்கில் வந்து போவார் வடிவேலு. ஒரு பக்கம் விஜய்யின் மாஸ் காட்சிகளுடன் மறுபக்கம் வடிவேலுவின் தமாஷ் காட்சிகளும் சேர்ந்து அந்தப் படத்தை பிளாக்பஸ்டர் படமாக மாற்றியது.
2011ல் வெளிவந்த காவலன் திரைப்படமும் விஜய் வடிவேலு கூட்டணியின் ஆகச்சிறந்த நகைச்சுவை படங்களில் ஒன்றாக அமைந்தது. வடிவேலு விஜய் இடையே நகைச்சுவை கூட்டணி பட்டையை கிளப்பும் என்பதற்கு காவலன் திரைப்படம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக மாறியது. கண்ணதாசா ஏசுதாஸா, அப்துல் கலாமா, ஆபிரகாம் லிங்கனா என வடிவேலு வுக்கு இந்த திரைப்படத்தில் எழும் சந்தேகங்கள் ஒவ்வொன்றும் தமிழ் சினிமா வரலாற்றில் ஆழமாக பதிக்கப்பட்ட நகைச்சுவை காட்சிகளாக மாறின. காவலன் படத்துக்கு முன்பு சில தொடர் தோல்விகளால் துவண்டு போய் இருந்தார் விஜய். அதேபோல் வடிவேலுவும் அரசியலில் சர்ச்சையை கிளப்பி சினிமாவுக்கு கொஞ்சம் கேப் விட தொடங்கி இருந்தார்.
அப்படியான தருணத்தில் இப்படம் இவர்கள் இருவருக்குமே கம்பேக் ஆக அமைந்தது. நடிப்பை தாண்டி இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள மற்றுமொரு ஒற்றுமை, இவர்கள் இருவருமே சிறந்த பாடகர்கள் என்பதுதான். இதை நன்கு அறிந்த தேவா, இவர்கள் இருவரையும் இணைத்து பகவதி படத்தில் ஒரு பாடலை பாட வைத்திருப்பார். காமெடியும், கானாவும் சேர்ந்து களைகட்டிய அந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதில் இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால், இப்பாடலில் வடிவேலு விஜய்க்கு இணையாக போட்டி போட்டி டான்ஸ் ஆடி அசத்தி இருப்பார்.
தொடர் வெற்றிகள் கொடுத்தால், விஜய் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு, அவர் ஒரே மாதிரியான வேடத்தில் நடிக்கிறார் என்பது தான். ஆனால் வடிவேலுவோ படத்துக்கு படம் விதவிதமான வேடங்களில் தோன்றுவது அவருடைய வழக்கம். அப்படித்தான் வில்லு படத்தில் வித்தியாசமான ஒரு ஹேர் ஸ்டைல் உடன் மாடா என்னும் மாடசாமியாக தோன்றி இருப்பார் வடிவேலு. அப்படம் வெற்றிபெறவில்லை என்றாலும், அன்றைய தினங்களில் அப்படத்தின் காமெடி காட்சிகள் ரசிகர்களிடம் பேசப்பட்டது. சில காரணங்களால் சினிமாவிலிருந்து நடக்காமல் விலகி இருந்த வடிவேலு, ஒரு சின்ன கேப்பிற்கு பிறகு ரீ-எண்ட்ரி கொடுத்ததும் விஜய்யின் மெர்சல் திரைப்படத்தில்தான்.
இந்த படத்தில் காமெடியனாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு ரசிகர்களை குஷிப்படுத்தியது இந்த கூட்டணி. வடிவேலுவை எப்படியாவது பார்த்து விட மாட்டோமா என ஏங்கிக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு, விஜய்யுடனே அவர் கூட்டணி அமைத்து களமிறங்கிய இரட்டை விருந்தாக மாறியது. வடிவேலு இல்லாமலும் பல படங்களில் காமெடியில் கலக்கி இருப்பார் விஜய். அதேபோல் விஜய் இல்லாத பல படங்களில் வடிவேலும் தனி முத்திரை பதித்திருப்பார். ஆனாலும் இவர்கள் இருவரும் சேர்ந்து கொடுத்த படங்கள் ரசிகர்களுக்கு என்றுமே ஸ்பெஷல் தான். அதனால்தான் இந்த கூட்டணி இணைந்த படங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அவை என்றென்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவையாக ஜொலித்துக் கொண்டிருக்கிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.