அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் படங்களுக்கு 100 சதவீத வரி விதித்துள்ளதால், அது கோலிவுட்டை எந்த அளவு பாதிக்கும் என்பதை பார்க்கலாம்.
டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறையாக தேர்வானதில் இருந்து பல்வேறு அதிரடி அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று காலை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் டிரம்ப். அதன்படி வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் படங்களுக்கு அமெரிக்காவில் 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பால் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளில் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவில் வெளியிடப்படும் படங்களுக்கு மிகப்பெரிய சிக்கலாக அமைந்துள்ளது.
25
டிரம்பின் 100 சதவீத வரியால் பாதிக்கும் இந்திய திரையுலகம்
டிரம்பின் இந்த 100 சதவீத வரி இந்திய திரையுலகிற்கு ஒரு பேரிடியாக அமைந்துள்ளது. ஏனெனில் இந்தியாவில் கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என பல்வேறு திரையுலகில் தயாரிக்கப்படும் படங்களுக்கு அமெரிக்காவில் மிகப்பெரிய அளவில் மார்க்கெட் உள்ளது. இங்கு ஆயிரம் கோடி, இரண்டாயிரம் கோடி என வசூல் அள்ளியதற்கு அமெரிக்க வசூலும் ஒரு முக்கிய காரணம். தற்போது இந்த 100 சதவீத வரிவிதிப்பால் அந்த வசூல் கம்மியாக வாய்ப்புள்ளது.
35
இந்திய படங்களின் விநியோக செலவு இரட்டிப்பாகும்
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களை கருத்தில் கொண்டு பெரும்பாலான இந்தியப் படங்கள் அங்கு வார வாரம் ரிலீஸ் ஆகி வருகிறது. இந்த 100 சதவீத வரி விதிப்பின் காரணமாக இனி அமெரிக்காவில் வெளியிடப்படும் இந்திய படங்களுக்கான விநியோக செலவு இரட்டிப்பு ஆகக்கூடும். உதாரணத்திற்கு இதற்கு முன்னர் வரை ஒரு தமிழ் திரைப்படத்தை ஒரு மில்லியன் டாலருக்கு வாங்கி இதுவரை வெளியிட்டிருந்தால், இனி அதே படத்தை இரண்டு மில்லியன் டாலருக்கு வாங்கினால் தான் வெளியிட முடியும்.
இந்த 100 சதவீத வரி விதிப்பால் விநியோகஸ்தர்களுக்கு சுமை அதிகரிக்கும். மேலும் இந்த வரி விதிப்புக்கு பயந்தே பல படங்கள் திரையிடப்படாமலும் போகலாம். குறிப்பாக கோலிவுட்டில் விஜய், ரஜினி, கமல், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் 100 கோடி வசூலை அசால்டாக எட்டிப் பிடிப்பதற்கு ஓவர்சீஸ் வசூலும் முக்கிய காரணம். அதிலும் அமெரிக்காவில் தான் பல கோடி வசூல் கிடைக்கும்.
55
கோலிவுட்டுக்கும் சிக்கல்
தற்போது டிரம்பின் 100 சதவீத வரி விதிப்பால் தமிழ் சினிமாவுக்கு 1000 கோடி வசூல் என்பது எட்டாக்கனியாகவே இருக்குமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. விஜய், ரஜினி போன்ற நடிகர்களின் படங்கள் அமெரிக்காவில் மட்டும் கிட்டத்தட்ட 50 முதல் 100 கோடி வரை வசூலை அள்ளி வருகின்றன. இந்த வரிவிதிப்புக்கு பின் பெரிய நடிகர்களின் படங்கள் அங்கு ரிலீஸ் செய்யப்படுமா என்பதே கேள்விக்குரியாக உள்ளது. அப்படி ரிலீஸ் செய்தாலும் அங்கு போட்ட காசை எடுப்பதே மிகவும் சவாலான விஷயமாக மாறிவிடும்.