
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பாடகர்களில் டி.எம்.சௌந்தரராஜனும் ஒருவர். டிஎம்எஸ் என்று அழைக்கப்படும் அவர் 10,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். கலா ரத்னம், சிங்க குரலோன், கானக் குரலோன், இசை சக்ரவர்த்தி என பல புகழ்மொழிக்கும் சொந்தக்காரர் தான் டி.எம்.ஸ். தமிழ் திரையுலகின் அனைத்து முன்னணி நட்சத்திரங்களுக்கும் பின்னணி பாடல்கள் பாடிய சில பாடகர்களில் டிஎம். சௌந்தரராஜனும் ஒருவர்.
டி.எம்.சௌந்தரராஜனின் குரலமிகவும் ஈர்க்கப்பட்ட எம்.ஜி.ஆர். தனது எல்லா படங்களுக்கும் அவரே பாடல்களை பாட வேண்டும் என்று வலியுறுத்தினார். திரைப்படங்களில் பாடுவதைத் தவிர, அவர் ஒரு கர்நாடக இசைக்கலைஞராகவும் இருந்தார். மேலும் 250-க்கும் மேற்பட்ட பக்தி பாடல்களை அவர் பாடி உள்ளார். குறிப்பாக அழகென்ற சொல்லுக்கு முருகா, கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும், உள்ளம் உருகுதய்யா என இவரின் பாடல்கள் அனைத்தும் கேட்போரின் மனதை உருக வைக்கும்.
உள்ளம் உருகுதய்யா பாடலுக்கு பின்னால் சுவாரஸ்ய கதை உள்ளது. ஆம். இந்த பாடல் வெளியாகி பல ஆண்டுகள் வரை கூட டி.எம்.சௌந்தரராஜனுக்கு இந்தப் பாடலை எழுதிப் பாடியது யார் என்று தெரியாதாம். ஒரு முறை பழநிக்கு சென்ற டிஎம்எஸ் அங்கு ஒரு லாட்ஜில் தங்கிருந்த போது, சிறுவன் ஒருவன் இந்த பாடலை பாடிக்கொண்டிருந்தானாம்
அந்த பாடலை மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்தாராம் டி.எம்.எஸ். அவருக்கு இன்னொரு ஆச்சர்யமும் காத்திருந்தது. அந்த பாடலை பாடியது இஸ்லாமிய சிறுவனாம். உடனடியாக அந்த சிறுவனை அழைத்த டி எம் எஸ் அந்த பாடல் வரிகள் குறித்தும் அந்த பாடலை எழுதியவர் யார் என்பது குறித்தும் கேட்டுள்ளார். ஆனால் அச்சிறுவன் யார் பாடியது என்றெல்லாம் தெரியாது, நான் கேட்டிருக்கேன், நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளான். பின்னர் டி.எம்.சௌந்தரராஜன் அந்தப் சிறுவனை முழுப் பாடலைப் பாட வைத்து அதனை வரி வரியாக குறித்துக்கொண்டாராம்.
பின்னர் பல மேடைகளில் அந்த பாடலை தானே இசையமைத்து பாடி உள்ளார் டி.எம்.எஸ். எனினும் அந்த பாடலை யார் எழுதியது என்று அவருக்கு தெரியவில்லை. சில நாட்கள் கழித்து டி.எம்.எஸ் சென்னை தம்புசெட்டி தெருவில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்குச் சென்ற போது அங்கிருந்த கல்வெட்டு ஒன்றி, உள்ளம் உருகுதய்யா முருகா என்ற பாடல் பொறிக்கப்பட்டிருப்பதைக் பார்த்துள்ளார். கீழே ஆண்டவன் பிச்சி என்ற அந்த பாடலை எழுதியவரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆண்டவன் பிச்சி என்பவர் ஒரு பெண், இவரின் இயற்பெயர் மரகதம். படிப்பறிவு இல்லாத அவர் தனது 10 வயது முதலே முருகனின் பாடியுள்ளார். அப்படி தான் உள்ளம் உருகுதய்யா பாடலை சென்னை காளிகாம்பாள் கோயிலில் பாடி உள்ளார். சென்னையில் பாடப்பட்ட இந்த பாடல் எப்படியோ பழனி வரை சென்றடைய அதை கேட்ட இஸ்லாமிய சிறுவன், அந்த பாடலை முனுமுணுத்துள்ளார். அச்சிறுவன் பாடியதை கேட்டு தான் டிஎம்எஸ் அந்த பாடலை பாடி உள்ளார். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இன்றும் இந்த பாடல் முருகனின் உருக்காமான பாடல்களில் ஒன்றாக நிலைத்திருக்கிறது.