நடிகர் விஜய் நடிப்பில் லியோ படம் தயாராகி வருகிறது. அப்படத்தின் ஷூட்டிங்கை செம்ம ஸ்பீடாக நடத்தி வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இன்னும் ஓரிரு மாதத்தில் லியோ படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துவிடும் என்பதால், தற்போதே விஜய் நடிக்க உள்ள தளபதி 68 படம் குறித்த தகவல்கள் தொடர்ந்து கசிந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக அப்படத்தை இயக்கப்போவது யார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.
அதன்படி முதலில் இப்படத்தை அட்லீ இயக்க உள்ளதாகவும், சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் அண்மையில் ரஜினி - லோகேஷ் கூட்டணி உறுதியானதால், அந்த புராஜெக்டில் தன் முழு கவனத்தையும் செலுத்தி வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனம், விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகும் படத்தை கிடப்பில் போட்டது. இதனால் தளபதி 68 பட இயக்குனர் ரேஸில் இருந்து அட்லீ விலகியது உறுதியானது.
இதையடுத்து தான் தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மலினேனி இந்த ரேஸில் இணைந்தார். அவர் சமீபத்தில் நடிகர் விஜய்யை சந்தித்து கதை சொல்லி ஓகே வாங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இயக்குனர் கோபிசந்த் மலினேனி தெலுங்கில் கிராக், வீரசிம்ஹா ரெட்டி போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கியவர் ஆவார். இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. விஜய் பிறந்தநாளன்று இப்படம் குறித்த அப்டேட்டும் வெளியாக வாய்ப்புள்ளது.
இதையும் படியுங்கள்... தமிழகத்தில் மட்டும் லேட்டாக ரிலீசாகும் பொன்னியின் செல்வன் 2... ரெட் ஜெயண்ட் வெளியிட்டும் இந்த நிலைமையா?
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படத்தில் விஜய் நாயகனாக நடிப்பார் என ஏற்கனவே நடிகர் ஜீவா ஒரு பேட்டியில் கூறியதால், கோபிசந்த் மலினேனி இயக்க உள்ள தளபதி 68 படத்தை அந்நிறுவனம் தயாரிக்க அதிகளவு வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படம் அந்நிறுவனம் தனியாக தயாரிக்காமல் தெலுங்கில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.