பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, 15வது நாளில் இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை எடுத்தது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஒன்பது இடங்களில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிகாலை ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாதப் பயிற்சி முகாம்கள் அழிக்கப்பட்டன. அதிகாலை 1.44 மணிக்கு ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தின.
24
சக்சஸ் ஆன ஆபரேஷன் சிந்தூர்
பதிலடிக்குப் பிறகு 'நீதி நிறைவேற்றப்பட்டது' என்று ராணுவம் தெரிவித்தது. பாகிஸ்தானின் ராணுவ முகாம்கள் தாக்கப்படவில்லை என்றும், பயங்கரவாத முகாம்களை மட்டுமே குறிவைத்ததாகவும் ராணுவம் விளக்கியது. தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ராணுவத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதற்கிடையில், பாகிஸ்தான் தாக்குதலை உறுதிப்படுத்தியது. கொல்லப்பட்டவர்கள் அப்பாவிகள் என்று பாகிஸ்தான் கூறியது.
34
பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்தியா
ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவுடன் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் மூன்று பயங்கரவாத குழுக்களை இந்தியா குறிவைத்தது. லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்தியாவின் இந்த அதிரடி தாக்குதலுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது : “போராளியின் சண்டை தொடங்கிவிட்டது. மிஷன் முடியும் வரை ஓய்வில்லை. ஒட்டுமொத்த தேசமும் உங்களோடு துணை நிற்கும். ஜெய் ஹிந்த்” என குறிப்பிட்டு பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை டேக் செய்துள்ளார் ரஜினிகாந்த். அண்மையில் நடைபெற்ற வேவ்ஸ் மாநாட்டில் மோடியை போராளி என ரஜினிகாந்த் புகழ்ந்து பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.