கவிஞர் வைரமுத்து தான் எழுதிய கவிதை ஒன்றை அஜித் படத்தின் பாடலுக்காக மாற்றியமைத்து அந்த பாடலும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அது என்ன பாடல் என்பதை பார்க்கலாம்.
அஜித்தின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் அமர்க்களம். அப்படத்தின் மூலம் தான் அஜித்தும், ஷாலினியும் காதலித்தனர். அந்த படத்தின் ஸ்கிரிப்டை இயக்குனர் சரண் எழுதி முடித்த சமயத்தில் நடிகர் அஜித் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். உடல் முழுக்க கட்டு போட்டு இருந்ததால் அஜித் அந்த படத்தில் நடிக்க வேண்டாம் என்கிற மன நிலையில் தான் இருந்தாராம்.
24
அமர்க்களம் பட பாடல் உருவான விதம்
அப்போது படத்தில் இடம்பெறும் பாடலுக்கான சூழலை சரண் சொல்ல, வைரமுத்து தான் ஏற்கனவே எழுதிய ‘பெய்யென பெய்யும் மழை’ என்கிற கவிதைத் தொகுப்பை எடுத்து, அதில் சில மாற்றங்களை செய்து கொடுக்க, அதற்கு பரத்வாஜ் ட்யூன் போட்டு, எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை பாட வைத்திருக்கிறார். அந்தப் பாடல் தான் அமர்க்களம் படத்தில் இடம்பெற்ற ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ என்கிற பாடல். இந்தப் பாடல் கம்போஸிங் முடிந்ததும் சரணும், பரத்வாஜும் நேரடியாக மருத்துவமனைக்கு சென்று அஜித்தை சந்தித்திருக்கிறார்கள்.
34
சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் பாடல் ரகசியம்
அதுவரை படத்தில் நடிக்க மறுத்து வந்த அஜித்திடம், ஒரு ஹெட்போனை கொடுத்து, இந்த பாடலை போட்டு காட்டி இருக்கிறார்கள். இந்த பாடலை கேட்டதும் தன்னுடைய முடிவை மாற்றிக் கொண்ட அஜித், கண்டிப்பா நான் இந்த படத்தில் நடிக்கிறேன் என சொல்லி கால்ஷீட்டும் கொடுத்திருக்கிறார். அஜித்தையே ஈர்க்கும் ஒரு பவர் இந்த பாடலுக்கு இருந்துள்ளது. இந்தப் பாடல் மொத்தம் 90 வரிகளைக் கொண்டதாம். தமிழ் சினிமா வரலாற்றில் அதிக வரிகளை கொண்ட பாடலும் இதுதானாம்.
இந்தப் பாடலை எஸ்பிபி மூச்சு விடாமல் பாடியதாக பலரும் நினைத்திருந்தார்கள். ஆனால் உண்மையில் இந்தப் பாடலை அவர் மூச்சு விடாமல் பாடவில்லையாம். நிறைய டேக்குகள் எடுத்து தான் பாடினாராம். இப்படி வைரமுத்துவின் வரிகள், எஸ்.பி.பியின் குரல், பரத்வாஜின் இசை என அனைத்தும் சேர்ந்து உருவாக்கிய ஒரு மேஜிக் தான் இந்த ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ பாடல். திரையிலும் இந்த பாடலுக்கு தன்னுடைய நடிப்பால் உயிர் கொடுத்திருந்தார் அஜித். அதனால் தான் இப்பாடல் காலம் கடந்து கொண்டாடப்படும் ஒரு கிளாசிக் ஹிட் பாடலாக உள்ளது.