இந்தியாவில் தீயாய் பரவி வரும் கொரோனா 2வது அலையால் பாதிப்பும், உயிரிழப்பும் புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் போதும், தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து மட்டுமே வருகிறது.
அரசியல் கட்சி தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள், திரையுலகினர் என பிரபலங்கள் பலரும் அடுத்தடுத்து கொரோனா தொற்றா பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பாலிவுட்டில் தீயாய் பரவி வரும் கொரோனா தொற்றுக்கு அடுத்தடுத்து முன்னணி நடிகர், நடிகைகள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது அந்த வரிசையில் பிரபல நடிகை தீபிகா படுகோனே இணைந்துள்ளார்.
தற்போது தீபிகா படுகோனே பெங்களூருவில் உள்ள தன்னுடைய பெற்றோருடன் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தீபிகாவின் தந்தையும், முன்னாள் பேட்மிண்டன் வீரருமான பிரகாஷ் படுகோன், தாயார் உஜ்ஜாலா, சகோதரி அனிஷா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து தொற்று அதிகம் இருந்ததால் தீபிகாவின் தந்தை மட்டும் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தீபிகா படுகோனின் அம்மா, சகோதரி ஆகியோர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒட்டுமொத்த குடும்பத்தினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், நடிகை தீபிகா படுகோனும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.
அதில் அவருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிரபல நடிகையின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் கொரோனா தொற்று ஆட்டி படைக்கும் சம்பவம் திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கோச்சடையான் படத்தில் அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.