
Empuraan Film: Ticket Booking Information : எம்புரான் படத்தின் முன்பதிவிற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை தொடங்கிய நிலையில் எம்புரான் டிக்கெட் முன்பதிவில் விஜய்யின் லியோ பட டிக்கெட் சாதனையை முறியடித்துள்ளது. பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 3ஆவது படம் தான் எம்புரான். ஏற்கனவே லூசிஃபர், ப்ரோ டாடி ஆகிய 2 படங்களை இயக்கி ஹிட் கொடுத்தார். இந்த 2 படங்களிலும் மோகன்லால் தான் ஹீரோவாக நடித்திருந்தார். இப்போது 3ஆவது முறையாக இருவரும் எம்புரான் படத்தில் இணைந்துள்ளனர்.
தென்னிந்திய சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று. இந்தப் படத்தின் ரிலீசுக்காக தமிழ் சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மோகன்லாலுக்கு தமிழிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என்று பான் இந்தியா படமாக உருவான எம்புரான் வரும் மார்ச் 27ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
அந்த நாளில் படத்தை வெளியிட ஒரு சிறப்பு காரணமும் உண்டு. அதாவது பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவான லூசிஃபர் திரைக்கு வந்து 6 வருடங்கள் ஆகிறது. ஆதலால், அந்த நாளில் எம்புரான் படத்தை படக்குழுவினர் வெளியிடுகின்றனர். ஆசிர்வாத் சினிமாஸ், ஸ்ரீ கோகுலம் மூவிஸ் தயாரிப்பில் மோகன்லால் நடித்துள்ள எம்புரான் திரைப்படம் மார்ச் 27ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
2019ல் வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான லூசிஃபரின் இரண்டாம் பாகமாக உருவாகும் எம்புரான் படத்தை ஆசிர்வாத் சினிமாஸ், ஸ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர், கோகுலம் கோபாலன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்தில் மோகன்லால் குரேஷி-அப்ராம் / ஸ்டீபன் என்ற முக்கிய ரோலில் மோகன் லால் நடித்துள்ளார். அவருடன் இணைந்து பிருத்விராஜ், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், இந்திரஜித் சுகுமாரன், சுராஜ் வெஞ்சாரமூடு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். கேம் ஆஃப் த்ரோன்ஸ் மூலம் உலகப் புகழ் பெற்ற ஜெரோம் ஃபிளின் இப்படத்தில் நடித்திருப்பது படத்திற்கு சர்வதேச அங்கீகாரத்தை அளித்துள்ளது.
எம்புரான் அப்டேட்
2023 அக்டோபர் 5ஆம் தேதி ஃபரிதாபாத்தில் படப்பிடிப்பு தொடங்கிய எம்புரான், அமெரிக்கா, இங்கிலாந்து, யுஏஇ, சென்னை, மும்பை, குஜராத், லடாக், கேரளா, ஹைதராபாத், ஷிம்லா, லே உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. தீபக் தேவ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார், படத்தொகுப்பை அகிலேஷ் மோகன் மேற்கொண்டுள்ளார். மோகன்தாஸ் கலை இயக்கம் செய்துள்ளார், ஸ்டண்ட் சில்வா சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
2025 ஜனவரி 26ஆம் தேதி முதல் டீசர் வெளியானதிலிருந்து படத்தின் விளம்பர பணிகள் தொடங்கப்பட்டன, மேலும் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் விதமும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஒவ்வொரு நடிகர்களும் தங்கள் கதாபாத்திரங்களைப் பற்றி பேசும் வீடியோக்கள் பிப்ரவரி 9 முதல் வெளியிடப்பட்டது.
எம்புரான் ரிலீஸ் எப்போது?
அது பிப்ரவரி 26 அன்று மோகன்லாலின் கேரக்டர் போஸ்டர், வீடியோவுடன் முடிந்தது. மோகன்லால் நடிக்கும் ஸ்டீபன் நெடும்பள்ளி/குரேஷி அப்ராம், பிருத்விராஜ் நடிக்கும் சையத் மசூத் ஆகியோரின் கேரக்டர் போஸ்டர்கள் மற்றும் வீடியோக்கள் பிப்ரவரி 26 அன்று வெளியானது. ஒவ்வொரு நாளும் இரண்டு கதாபாத்திரங்கள் வீதம் 18 நாட்களில் 36 கதாபாத்திரங்களை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினர்.
இந்தப் படம், ஒரு மலையாள படத்திற்கு கிடைக்கவுள்ள மிகப்பெரிய பான் இந்திய, உலகளாவிய வெளியீடாக இருக்கும். இப்படத்தின் மூன்றாம் பாகத்தில் மோகன்லால், பிருத்விராஜ், முரளி கோபி, தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆண்டனி பெரும்பாவூர் உள்ளிட்டோர் நடிப்பதை உறுதி செய்துள்ளனர். எம்புரான் படத்தின் தமிழ் டிரைலரை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். அந்த டிரைலர் வைரலாகி வருகிறது.
மோகன்லால் எம்புரான் முன்பதிவு சாதனை!
லூசிஃபர் படத்தின் தொடர்ச்சியான எம்புரான் திரைப்படம் 2025 மார்ச் 27 அன்று பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. ஐமேக்ஸ்-ல் வெளியாகும் முதல் மலையாளத் திரைப்படம் இது. முன்பதிவில் சாதனை படைத்து வருவதால், எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இப்படத்திற்கான முன்பதிவு இந்தியாவில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இன்று காலை தொடங்கிய முன்பதிவில் எம்புரான் சாதனை படைத்துள்ளது.
ஒரு மணிநேரத்தில் 96.14 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்ததோடு தளபதி விஜய்யின் லியோ பட டிக்கெட் சாதனையை முறியடித்துள்ளது. அதோடு முதல் நாளில் மட்டும் இந்தியாவில் ரூ.10 கோடி குவித்த எம்புரான் உலகளவில் ரூ.12 கோடியை தாண்டி வசூல் குவித்து வருகிறது.
மீண்டும் 2ஆவது முரையாக மோகன்லால் – விக்ரம் மோதல்
9 ஆண்டுகளுக்கு முன்பு விக்ரமின் இருமுகன் மற்றும் மோகன்லாலின் ஒப்பம் ஆகிய 2 படங்களும் ஒரே நாளில் வெளியாகி நேர்மறையான விமர்சனங்களோடு பாக்ஸ் ஆபிஸ்லும் நல்ல வரவேற்பு பெற்றது. இப்போது மீண்டும் மோகன்லால் மற்றும் விக்ரம் படங்கள் ஒரே நாளில் திரைக்கு வர இருக்கின்றன. எம்புரான் மற்றும் வீர தீர சூரன் ஆகிய 2 படங்களும் மார்ச் 27ஆம் தேதி திரைக்கு வர இருக்கின்றன.
பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கியுள்ள இப்படத்தை முரளி கோபி எழுதியுள்ளார். எம்புரான் திரைப்படம் மூன்று பாகங்களாகத் திட்டமிடப்பட்டுள்ளது. எம்புரான் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என்று வர்த்தக ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.