
நெல்சன் திலீப் குமார் என சொன்னதும் நினைவுக்கு வருவது அவர் இயக்கிய படங்கள் தான். இவர் நயன்தாரா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளிவந்த கோலமாவு கோகிலா திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ஆனால் அவர் இயக்கிய முதல் திரைப்படம் இது இல்லை. அவர் கடந்த 2010-ம் ஆண்டே சிம்புவை வைத்து வேட்டை மன்னன் என்கிற திரைப்படத்தை இயக்கினார். அப்படத்தில் சிம்புவுடன் ஜெய், ஹன்சிகா, விடிவி கணேஷ் ஆகியோர் நடித்தனர். அப்படத்தை எஸ்.எஸ் சக்கரவர்த்தி தயாரித்து இருந்தார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்தார். இப்படம் சிம்புவுக்கு கிடைத்ததே ஒரு எதிர்பாரா சம்பவம் தான்.
நெல்சன், சிம்பு இயக்கிய வல்லவன் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றுவதாக இருந்ததாம். ஆனால் அந்த சமயத்தில் அந்த வாய்ப்பு கை நழுவி போனதை அடுத்து, ஒரு நாள் ஒரு ஹீரோவுக்கு கதை சொல்வதற்காக தன்னுடைய நண்பனான சிம்புவிடம் சொல்லிவிட்டு கிளம்பி இருக்கிறார் நெல்சன். அப்போது அந்த கதையை தன்னிடம் சொல்லுமாறு கேட்ட சிம்பு, கதை கேட்டதும் மிகவும் இம்பிரஸ் ஆனதால் அந்த படத்தில் தானே நடிப்பதாக கூறி கால்ஷீட் கொடுத்த படம் தான் வேட்டை மன்னன். இப்படத்தின் ஷூட்டிங் பாதி நிறைவடைந்த நிலையில், பைனான்ஸ் பிரச்சனை காரணமாக கைவிடப்பட்டது.
ஒரு இயக்குனருக்கு முதல் படம் தான் முக்கியமானது. அதை எப்படியாவது ஹிட் ஆக்கி விட வேண்டும். அப்படி செய்தால் தான் அடுத்தடுத்து சினிமாவில் நிலைத்திருக்க முடியும். ஆனால் நெல்சனுக்கு முதல் படத்திலேயே விதி விளையாடியது. வேட்டை மன்னன் திரைப்படம் டிராப் ஆன பின்னர், சினிமாவில் அவருக்கு அடுத்த சான்ஸ் கிடைக்க 7 ஆண்டுகள் ஆனது. இந்த 7 வருட போராட்டத்துக்கு பின் அவர் இயக்கிய படம் தான் கோலமாவு கோகிலா. அனிருத் தன்னுடைய நண்பர் என்பதால் அவரின் உதவியோடு லைகா நிறுவனத்திடம் கதை சொல்லி ஓகே வாங்கிய நெல்சன், அப்படத்தில் நயன்தாராவையும் நடிக்க வைத்தார்.
அப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஹைப் ஏறியதற்கு காரணம் நயன்தாரா ஜோடியாக யோகிபாபு நடிக்கிறார் என்கிற தகவல் தான். வேட்டை மன்னனில் மிஸ் பண்ணியதை கோலமாவு கோகிலாவில் விட்டுவிடக் கூடாது என்கிற முனைப்போடு, கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கிய நெல்சன் முதல் படத்திலேயே பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தார். கோலமாவு கோகிலா படம் ஹிட்டான பின்னர் நெல்சனுக்கு சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுவரை சிவகார்த்திகேயனை ஜாலியான ஹீரோவாக பார்த்த ரசிகர்களுக்கு, முதன்முறையாக அவரை முழுக்க முழுக்க சீரியஸான ரோலில் நடிக்க வைத்து அதில் வெற்றியும் கண்டார் நெல்சன்.
சொல்லப்போனால் கோலமாவு கோகிலா படத்தின் ஒன்லைனும், டாக்டர் படத்தின் ஒன்லைனும் ஒன்று தான். கோலமாவு கோகிலா படத்தில் காதலி நயன்தாராவின் குடும்பத்தை பிரச்சனையில் இருந்து காப்பாற்ற நாயகன் யோகிபாபு போராடுவார். அதேபோல் தான் டாக்டர் படத்திலும் நாயகி பிரியங்கா மோகனின் குடும்பத்தை பிரச்சனையில் இருந்து காப்பாற்ற நாயகன் சிவகார்த்திகேயன் களத்தில் இறங்குவார். ஆனால் இரண்டு படங்களையும் அவர் கையாண்ட விதம் அருமையாக இருக்கும். டாக்டர் படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்தது.
இதையடுத்து இயக்குனர் நெல்சன் அவசர கதியில் இயக்கிய திரைப்படம் தான் பீஸ்ட். இரண்டு ஹிட் படங்களுக்கு பின்னர் விஜய்யுடன் அவர் கூட்டணி அமைத்ததால் அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்தது. ஆனால் அப்படம் அட்டர் பிளாப் ஆனது. பீஸ்ட் படம் வெளியாவதற்கு முன்பே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தையும் இயக்க கமிட்டாகிவிட்டார் நெல்சன். பீஸ்ட் படத்தின் தோல்விக்கு பின் நெல்சன் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார். அதனால் அவரை ஜெயிலர் படத்தில் இருந்து நீக்கச் சொல்லி ரஜினிக்கு பல தரப்பில் இருந்து கோரிக்கை வந்திருக்கிறது. ஆனால் ரஜினி அவர் மீது நம்பிக்கை வைத்து அப்படத்தை நெல்சனே இயக்கட்டும் என சொல்லி இருக்கிறார்.
ரஜினி தன் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக இயக்குனர் நெல்சன், ஜெயிலர் படத்தை பான் இந்தியா அளவில் ஹிட்டாக்கி தரமான கம்பேக் கொடுத்தார். ரஜினியின் கெரியரிலும் மிகப்பெரிய வெற்றிப் படமாக ஜெயிலர் அமைந்தது. அப்படத்தின் வெற்றியால் செம ஹாப்பியான தயாரிப்பாளர் கலாநிதி மாறன், நெல்சனை அழைத்து ஜெயிலர் 2 கதையை தயார் செய்ய சொன்னார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அக்கதையை ரெடி செய்து தற்போது ஷூட்டிங்கையும் நடத்தி வருகிறார் நெல்சன். இதெல்லாம் நெல்சன் பற்றி அனைவருக்கும் தெரிந்த கதை. ஆனால் அவரைப் பற்றி பலருக்கும் தெரியாத பக்கங்கள் சில உள்ளன.
இயக்குனர் நெல்சன் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகும் முன்னர் யாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியதில்லை. அவருக்கு இந்த டைரக்ஷன் திறமையை வளர்த்துவிட்டது விஜய் டிவி தான். வல்லவன் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றும் சான்ஸ் மிஸ் ஆன பின்னர், அப்போது சிம்பு உடன் பழக்கம் ஏற்பட்டதால், அவரை தான் இயக்கிய ஜோடி நம்பர் 1 ஷோவுக்கு நடுவராக அழைத்து வந்தார் நெல்சன். ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் சிம்பு - பப்லு சண்டையை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அந்த ஷோவை இயக்கியது நெல்சன் தான். அவர்களின் சண்டையை அப்படியே ஒளிபரப்பாக்க வேண்டும் என நெல்சன் எடுத்த முடிவால், சின்னத்திரை வரலாற்றில் அதிக டிஆர்பி ரேட்டிங் பெற்ற ரியாலிட்டி ஷோ என்கிற சாதனையை படைத்தது ஜோடி நம்பர் 1.
இதையடுத்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் சில சீசன்களை சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கி இருப்பார். அதையெல்லாம் இயக்கியது நெல்சன் தான். தனக்கு வேட்டை மன்னன் படம் டிராப் ஆன பின்னர், மீண்டும் விஜய் டிவிக்கே சென்ற நெல்சன், அதில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனை இயக்கினார். இன்று பல சீசன்கள் வந்தாலும், அந்த முதல் சீசன் அளவுக்கு வேறு எந்த சீசனும் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அந்த பெருமைக்கு சொந்தக்காரர் நெல்சன் தான். இதுதவிர ஷங்கர் இயக்கிய பிரம்மாண்ட படங்களான ஐ மற்றும் எந்திரன் 2.0 ஆகியவற்றின் இசை வெளியீட்டு விழாக்களை டைரக்ட் செய்ததும் நெல்சன் தான். மேலும் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியையும் நெல்சன் இயக்கி இருக்கிறார். இப்படி சினிமாவை தாண்டி சின்னத்திரையிலும் பல சாதனைகளை படைத்துள்ள நெல்சன் இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.