பாலிவுட் நடிகர் தர்மேந்திரா உயிரிழந்துவிட்டதாக செய்திகள் பரவி வந்த நிலையில், அதை அவரது குடும்பத்தினர் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். அவரது மனைவி ஹேமமாலினி அதுகுறித்து பதிவிட்டுள்ளதை பார்க்கலாம்.
மூத்த பாலிவுட் நடிகர் தர்மேந்திரா உயிரிழந்துவிட்டதாக செய்திகள் பரவி வந்தன. இந்த நிலையில், தர்மேந்திராவின் மகள் ஈஷா தியோல் அந்த செய்திகள் உண்மையில்லை என்றும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் குணமடைந்து வருவதாகவும் கூறியுள்ளார். தர்மேந்திரா சுமார் 11 நாட்களாக மும்பையின் ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், திங்களன்று அவர் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டதாக செய்தி வெளியானது. இருப்பினும், கவலைப்பட ஒன்றுமில்லை என்று குடும்பத்தினர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
24
தர்மேந்திராவுக்கு என்ன ஆச்சு?
அக்டோபர் 31 அன்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் தர்மேந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, அவர் வழக்கமான பரிசோதனைக்காக அங்கு சென்றதாகவும், தனது விருப்பத்தின் பேரில் அனுமதிக்கப்பட்டதாகவும் செய்தி வெளியானது. நவம்பர் 10 வரை அவரது உடல்நிலை சீராக இருந்தது. ஆனால், திங்களன்று திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்து, அவர் லைஃப் சப்போர்ட் சிஸ்டத்தில் வைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இதையடுத்து இன்று காலை அவர் மரணமடைந்துவிட்டதாக செய்திகள் பரவத் தொடங்கின.
34
ஈஷா தியோல் விளக்கம்
அதுகுறித்து ஈஷா தியோல் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளதாவது, "என் தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது, அவர் குணமடைந்து வருகிறார். எங்கள் குடும்பத்தின் பிரைவசிக்கு மதிப்பளிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். அப்பா விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்ததற்கு நன்றி." என பதிவிட்டுள்ளார்.
அதேபோல் தர்மேந்திராவின் மனைவி ஹேமமாலினியும் தர்மேந்திரா மறைவுச் செய்தியை திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். சிகிச்சைக்கு ஒத்துழைக்கும் ஒருவரை, குணமடைந்து வரும் ஒருவரைப்பற்றி தவறான செய்திகள் பரப்புவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது பொறுப்பற்ற செயல். தயவு செய்து குடும்பத்தின் பிரைவசிக்கு மதிப்பளியுங்கள் என தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.