
Dhanush and Pradeep Ranganathan Who is Best Director : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் தனுஷ் நடிகர் மட்டுமின்றி இயக்குநர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர் என்று பன்முக கலைஞராக இருக்கிறார். ஏராளமான படங்களில் நடித்து ஹிட்டும் கொடுத்திருக்கிறார். கடைசியாக ராயன் படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் பா பாண்டி மற்றும் ராயன் ஆகிய படங்களுக்கு பிறகு இப்போது 3ஆவது படத்தையும் இயக்கி வெளியிட்டுள்ளார். நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். முழுக்க முழுக்க காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எடுக்கப்பட்ட நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படமானது இன்று பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
சினிமா விமர்சகரான ரமேஷ் பாலாவும் தனது எக்ஸ் பக்கத்தில் பாசிட்டிவாக விமர்சனம் கொடுத்திருக்கிறார். அதில் வழக்கமான கதையாக இருந்தாலும் சுவாரஸ்யமாகவும், சிறந்த பொழுதுபோக்கு படமாகவும் இருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார். உண்மையில் இது தனுஷோட கதை இல்லை. இந்தப் படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் தான் முதலில் தனுஷை வைத்து இயக்க இருந்தது. ஆனால், இந்தப் படத்தின் கதையை வாங்கிய தனுஷ் தானே இயக்க முடிவு செய்து வெற்றிகரமாக எடுத்து முடித்து இன்று வெளியிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக தனுஷ் இயக்கத்தில் வந்த பா பாண்டி படம் ஆவரேஜ் படமாக அமைந்த நிலையில், அடுத்ததாக எடுத்த ராயன் படம் தனுஷின் கேரியரில் சிறந்த படமாகவும் அமைந்தது. இப்போது 3ஆவது படமும் ஹிட் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷைப் போன்று இப்போது நடிகரும், இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன் அவதாரம் எடுத்து வருகிறார். ஏற்கனவே ரவி மோகன் நடிப்பில் கோமாளி என்ற படத்தை இயக்கி அந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவும் செய்திருந்தார். 2019 ஆம் ஆண்டு ரவி மோகன், காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு ஆகியோரது நடிப்பில் திரைக்கு வந்த படம் தான் கோமாளி. குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரூ.41 கோடி வரையில் வசூல் குவித்தது.
இந்தப் படத்தை தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு பிறகு லவ் டுடே என்ற படத்தை இயக்கினார். இந்தப் படத்திற்கு ரொம்பவே கம்மி பட்ஜெட். ரூ.5.5 கோடியில் எடுக்கப்பட்ட படம். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த படம். யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்திருந்தார். காதல் ஜோடிகள் தங்களது செல்போனை மாற்றிக் கொண்டால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை சர்வ சாதாரணமாக சொல்லியிருந்தார் பிரதீப் ரங்கநாதன். இந்தப் படம் கொடுத்த வரவேற்பு காரணமாக ஹிந்தியிலும் இந்தப் படம் டப்பிங் செய்யப்பட்டது.
தற்போது 3 ஆண்டுகளாக எந்தப் படமும் இயக்கவில்லை. மாறாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். லவ் டுடே படத்திற்கு பிறகு டிராகன் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் இன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதே போன்று விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தையும் இயக்கி வருகிறார். இந்த நிலையில் தான் தனுஷ் மற்றும் பிரதீப் ரங்கநாதன் ஆகியோருக்கு இடையில் யார் சிறந்த இயக்குநர் என்ற விவாதம் இப்போது தொடங்கியிருக்கிறது. இதற்கு காரணம் இருவருமே நடிகர் மற்றும் இயக்குநர். தனுஷ் இன்று 3ஆவது படத்தை வெளியிட்டிருக்கிறார். பிரதீப் 2 படங்களை இயக்கியிருக்கிறார்.
இன்னும் ஓரிரு ஆண்டுகளில் 3ஆவது படத்தையும் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதீப் தான் இயக்கிய 2 சிறிய பட்ஜெட் படங்களையும் ஹிட் கொடுத்திருக்கிறார். தனுஷ் இயக்கிய படங்களில் ஒரு ஆவரேஜ் படத்தையும், ஒரு ஹிட் படத்தையும் கொடுத்திருக்கிறார். 3ஆவது படமான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் ஹிட் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருவருமே அவர்களது டிராக்கில் பெஸ்டான இயக்குநர்கள் தான். டிராக் ஒன்றாக இருந்தாலும் கதையும், காட்சியும் வேறு வேறு தான். ரசிகர்கள் இருவரது படங்களையும் கொண்டாடுகிறார்கள். என்ன வித்தியாசம் என்றால் தனுஷ் பெரிய பட்ஜெட், பிரதீப் சிறிய பட்ஜெட் மூவிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.