
ஜூலை மாதம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த ஜூலை மாதத்தில் தமிழ் சினிமாவுக்கு 3 பிஹெச்கே, பறந்து போ, தலைவன் தலைவி போன்ற வெற்றிப் படங்கள் கிடைத்துள்ளன. இதில் தலைவன் தலைவி திரைப்படம் மட்டும் வசூலில் மாஸ் காட்டி வருகிறது. மற்றபடி பெரியளவில் எந்தப் படமும் வசூலிக்கவில்லை. ஆனால் ஆகஸ்ட் மாதம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் இந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம், 20 படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அது என்னென்ன படங்கள்? எந்தெந்த தேதிகளில் ரிலீஸ் ஆகிறது? என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஆகஸ்ட் 1-ந் தேதி மட்டும் 10 படங்கள் தமிழில் ரிலீஸ் ஆக உள்ளன. இதில் யோகிபாபு மற்றும் உதயா நடித்த அக்யூஸ்ட், புதுமுகங்கள் நடித்துள்ள போகி, ஜிவி பிரகாஷ் குமார் நாயகனாக நடித்துள்ள பிளாக் மெயில், தர்ஷன் ஹீரோவாக நடித்த ஹவுஸ்மேட்ஸ், கதிர் நடிப்பில் உருவாகி இருக்கும் மீஷா, விஜய் டிவி புகழ் கதையின் நாயகனாக நடித்துள்ள மிஸ்டர் ஜூ கீப்பர், வெற்றி நடித்த முதல் பக்கம், பிக் பாஸ் தர்ஷன் ஹீரோவாக நடித்துள்ள சரண்டர், அசுரன் புகழ் டிஜே மற்றும் பிக் பாஸ் ஜனனி ஜோடியாக நடித்துள்ள உசுரே போன்ற புதுப்படங்கள் திரைக்கு வர உள்ளன. இதனுடம் தனுஷின் ராஞ்சனா படமும் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. அதேபோல் ஆகஸ்ட் 8-ந் தேதி ரெட் ஃபிளவர் என்கிற ஒரே ஒரு தமிழ் படம் ரிலீஸ் ஆகிறது.
ஆகஸ்ட் மாதம் 14-ந் தேதி சுதந்திர விடுமுறையை ஒட்டி இரண்டு பிரம்மாண்ட திரைப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. அதில் ஒன்று கூலி. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு போட்டியாக வார் 2 என்கிற பான் இந்தியா படமும் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை அயன் முகர்ஜி இயக்கி உள்ளார். இப்படத்தில் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் மற்றும் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
ஆகஸ்ட் 22-ந் தேதி இரண்டு தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகிறது. அதில் ஒன்று இந்திரா. இப்படத்தில் வஸந்த் ரவி ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மெஹ்ரின் பிர்சாடா நடித்துள்ள இப்படத்தை சபரீஷ் நந்தா இயக்கி உள்ளார். பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அஜ்மல் இசையமைத்துள்ளார். அதேபோல் இதற்கு போட்டியாக சொட்ட சொட்ட நனயுது என்கிற படமும் ரிலீஸ் ஆகிறது. நிஷாந்த் ரூசோ நாயகனாக நடித்துள்ள இப்படத்தை நவீன் எஸ் ஃபரீத் இயக்கி உள்ளார். இப்படத்தில் ரோபோ ஷங்கர், பிக் பாஸ் வர்ஷினி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஆகஸ்ட் 27-ந் தேதி 3 தமிழ் படங்கள் திரைக்கு வருகின்றன. அதில் ஒன்று ஜிவி பிரகாஷின் அடங்காதே. இப்படத்தில் சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ஷண்முகம் முத்துசாமி இயக்கி உள்ளார். இதனுடன் கடுக்கா என்கிற படமும் ரிலீஸ் ஆகிறது. இதில் விஜய் கெளரீஷ், ஸ்மேஹா மணிமேகலை ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை எஸ்.எஸ்.முருகரசு இயக்கி உள்ளார். இதுதவிர கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்துள்ள ரிவால்வர் ரீட்டா திரைப்படமும் ஆகஸ்ட் 27ந் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படத்தை ஜேகே சந்துரு இயக்கி உள்ளார்.
ஆகஸ்ட் 29-ந் தேதி ஓணம் விடுமுறையை ஒட்டி மூன்று படங்கள் ரிலீஸ் ஆகிறது. அதில் ஒன்று பல்டி. இப்படத்தில் ஷான் நிகம் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இதனுடன் குற்றம் புதிது என்கிற தமிழ் படம் ரிலீஸ் ஆகிறது. இதை நோவ ஆர்ம்ஸ்ட்ராங் இயக்கி உள்ளார். இதுதவிர அதர்வா ஹீரோவாக நடித்த தணல் திரைப்படமும் ஆகஸ்ட் 29ந் தேதி ரிலீஸ் ஆகிறது. ரவீந்திர மாதவா இயக்கி உள்ள இப்படத்தை ஜான் பீட்டர் தயாரித்துள்ளார். இதில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் அதர்வா.