
மெகாஸ்டார் சிரஞ்சீவி டோலிவுட்டில் பெற்ற புகழும் சாதனைகளும் எண்ணிலடங்காதவை. கடந்த 46 ஆண்டுகளாக சிரஞ்சீவி டோலிவுட்டில் ஈடு இணையற்ற ஆதிக்கத்தை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக சிரஞ்சீவி தனது படங்களில் நடனம் மூலம் புதிய போக்கையே உருவாக்கினார். டோலிவுட்டில் சிரஞ்சீவியின் வருகைக்கு முன் நடனங்கள் வேறு மாதிரி இருந்தன. அதை முற்றிலும் மாற்றி நடனம் என்றால் இதுதான் என்று புதிய போக்கை உருவாக்கினார்.
தற்போது மெகாஸ்டாரின் நடனத்திற்கு கின்னஸ் உலக சாதனை கிடைத்துள்ளது. திரைப்படங்களில் அதிக பாடல்களுக்கு நடனமாடிய நடிகராக சிரஞ்சீவி வரலாறு படைத்துள்ளார். இதன் மூலம் கின்னஸ் உலக சாதனையுடன் சிரஞ்சீவியை கௌரவித்தனர். இதற்காக ஹைதராபாத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு சிரஞ்சீவிக்கு கின்னஸ் உலக சாதனை விருது வழங்கப்பட்டது.
பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமீர்கானின் கைகளால் சிரஞ்சீவி கின்னஸ் உலக சாதனை விருதைப் பெற்றார். சிரஞ்சீவி 156 படங்களில் நடித்துள்ளார். நூற்றுக்கணக்கான பாடல்களுக்கு அற்புதமான நடனம் ஆடியுள்ளார். சிரஞ்சீவி போல அதிக பாடல்களுக்கு நடனமாடிய நடிகர் வேறு யாரும் இல்லை. இந்த நிகழ்வில் திரைப்பிரபலங்கள், சிரஞ்சீவியுடன் பணியாற்றிய இயக்குனர் தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர். கின்னஸ் புத்தக பிரதிநிதிகள், அமீர்கான் ஆகியோர் இணைந்து சிரஞ்சீவிக்கு விருதை வழங்கினர்.
இதையும் படியுங்கள்... "விஜயுடன் இணைத்து சர்ச்சை பேச்சு" கிளப்பிவிட்ட YouTube சேனல் - சும்மா லெப்ட் ரைட் வாங்கிய சிம்ரன்!
முன்னதாக டோலிவுட்டில் இருந்து கின்னஸ் சாதனை படைத்தவர்களில் தயாரிப்பாளர் ராமானாயுடு, பிரம்மானந்தம் ஆகியோர் உள்ளனர். சிரஞ்சீவி எந்த வயதை நெருங்கினாலும் இளைஞர்களுக்கு சவால் விடும் வகையில் நடனமாடுகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. மொத்தத்தில் சிரஞ்சீவியின் நடனத்திற்காகவே கின்னஸ் சாதனை வந்து சேர்ந்துள்ளது என்று கூறலாம்.
சிரஞ்சீவி தனது 45 ஆண்டு திரை வாழ்க்கையில் 537 பாடல்களுக்கு நடனமாடி உள்ளார். இதில் 24,000க்கும் மேற்பட்ட நடன அசைவுகள் உள்ளன. மொத்தம் சிரஞ்சீவி 156 படங்களில் நடித்துள்ளார். நடனத்தின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களை மயக்கிய மெகாஸ்டாருக்கு கின்னஸ் சாதனை கிடைத்ததையடுத்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாட்ட பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். கின்னஸ் சாதனை விழாவில் சிரஞ்சீவி, அமீர்கான் ஆகியோர் உரையாற்றினர்.
கின்னஸ் சாதனையை தான் எதிர்பார்க்கவில்லை என்று சிரஞ்சீவி கூறினார். இதற்கு தனது இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், ரசிகர்களே காரணம் என்று சிரஞ்சீவி தெரிவித்தார். நடனத்தின் மீது தனக்கு இருந்த ஆர்வமே கின்னஸ் சாதனை கிடைக்க வழிவகுத்தது என்று சிரஞ்சீவி தெரிவித்தார். இந்த நிகழ்வு இவ்வளவு பிரமாண்டமாகவும், மறக்கமுடியாததாகவும் இருக்கக் காரணம் எனது நண்பர் அமீர்கான். ஒரு சிறிய குறுஞ்செய்தி, தொலைபேசி அழைப்பு மூலம் அவர் இங்கு வந்ததற்கு நன்றி.
நான் சிறுவயதில் என்னைச் சுற்றியிருந்தவர்களை மகிழ்விக்க நடனமாடுவேன். அந்தக் காலத்தில் மாலை ஆகும்போது விவித் பாரதி அல்லது ரேடியோ சிலோனில் பல்வேறு தமிழ் பாடல்களுக்கு நான் நடனமாடுவேன். அப்போது கிராமஃபோன்கள், டேப் ரெக்கார்டர்கள் இல்லை. அதனால் இந்த வானொலிகளில் பாடல்கள் ஒலிபரப்பானதும், `சங்கர் பாபுவை கூப்பிடுங்க.. டான்ஸ் ஆடுவார்.. எல்லாரையும் சிரிக்க வைப்பார்..' என்று எல்லாரும் சொல்வாங்க. அவர்களின் உற்சாகத்தைப் பார்த்து நான் மேலும் உற்சாகம் பெற்று நடனமாடுவேன்.
அதேபோல் திரைப்பட - அரசியல் பிரமுகர்கள் சிரஞ்சீவி கின்னஸ் சாதனை படைத்ததற்காக சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆந்திர முதல்வர் சந்திரபாபு, துணை முதல்வர் பவன் கல்யாண், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இயக்குனர் ஷங்கர் ஆகியோர் சிரஞ்சீவியை பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆந்திர முதல்வர் சந்திரபாபு, சிரஞ்சீவி கின்னஸ் சாதனை படைத்தது தெலுங்கு மக்களுக்கு பெருமை என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
இதையும் படியுங்கள்... சிறுவர்கள் மீதான தாக்குதல்.. பாடகர் மனோ மகன்களுக்கு அளிக்கப்பட்ட முன்ஜாமீன் - முழு விவரம்!