புலி பட சம்பளத்தை மறைத்த விவகாரம்... விஜய்க்கு வருமான வரித்துறை விதித்த அபராதத்திற்கு இடைக்கால தடை விதிப்பு

First Published Aug 16, 2022, 1:37 PM IST

Actor Vijay : புலி படத்திற்காக வாங்கிய ரூ.15 கோடி சம்பளத்தை வருமான வரிக்கணக்கில் காட்டவில்லை என்பதை கண்டறிந்தது நடிகர் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்திருந்தது வருமான வரித்துறை.

நடிகர் விஜய், கடந்த 2016-17 நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்தபோது, அந்த வருடத்திற்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித்துறை, நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015-ம் ஆண்டு சோதனை நடத்தியது.

அந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஒப்பிட்டு பார்த்ததில், புலி படத்திற்காக வாங்கிய ரூ.15 கோடி சம்பளத்தை வருமான வரிக்கணக்கில் காட்டவில்லை என்பதை கண்டறிந்தது. இதையடுத்து வருமானத்தை மறைத்ததற்காக நடிகர் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த ஜூன் மாதம் 30-ம் தேதி வருமான வரித்துறை இந்த உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதையும் படியுங்கள்... "இதயத்தை நொறுக்கும் இழப்பு"..திரை விமர்சகர் கெளஷிக் மரணம்..இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்

வருமான வரித்துறையின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அபராதம் விதிப்பதாக இருந்திருந்தால், 2019-ம் ஆண்டிலேயே வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும். தற்போது காலதாமதமாக பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை ரூ.1.50 கோடி அபராதம் விதித்து பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த மனுவுக்கு வருமான வரித்துறை செப்டம்பர் 16-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படியுங்கள்... வீட்டை சுத்தி காட்டுறேன்னு கூட்டிட்டு போய் கற்பழித்தார்... பிரபல பாடகர் மீது இளம்பெண் பரபரப்பு புகார்

click me!