பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. தற்போது 60 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் 13 போட்டியாளர்கள் எஞ்சி உள்ளனர். இவர்களில் இந்த வார நாமினேஷன் பட்டியலில் அசீம், ஏடிகே, ஜனனி, கதிரவன், ராம், ஆயிஷா ஆகிய ஆறு போட்டியாளர்கள் இடம்பெற்று உள்ளனர்.
கடந்த வார இறுதியிலேயே இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடத்தப்படும் என கமல்ஹாசன் திட்டவட்டமாக கூறிவிட்டு சென்றார். இதனால் போட்டியாளர்களும் கலக்கம் அடைந்தனர். இந்த சீசனில் நடைபெற உள்ள முதல் டபுள் எவிக்ஷன் இதுவாகும். இதில் யார் 2 பேர் வெளியேறப்போகிறார்கள் என்பதை அறிந்துகொள்ள அனைவரும் ஆவலோடு உள்ளனர்.
இந்த வார நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ள 6 பேரில் அசீமுக்கு தான் அதிகளவிலான வாக்குகள் கிடைத்துள்ளது என்பதால் அவர்தான் இந்த வாரம் முதலில் காப்பாற்றப்படுவார். இதற்கு அடுத்தபடியாக கதிரவனும், ஜனனியும் உள்ளனர். இதனால் இந்த மூவரும் இந்த வார டபுள் எவிக்ஷனில் இருந்து தப்பித்து விடுவார்கள் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... இயக்குனர் பாலாவை நம்பி... வணங்கான் படத்துக்காக இத்தனை கோடி செலவு செய்தாரா சூர்யா? - வெளியான ஷாக்கிங் தகவல்
எஞ்சியுள்ளது ஏடிகே, ராம் மற்றும் ஆயிஷா தான். இதில் ராமுக்கு தான் குறைவான வாக்குகள் கிடைத்துள்ளன. இதற்கு காரணம் அவர் வந்ததில் இருந்து பெரிதாக எந்த டாஸ்க்கிலும் சரிவர விளையாடியதில்லை, அதோடு தூங்கியே நேரத்தை கழித்து வருகிறார் என்பது குற்றச்சாட்டாக இருந்தது. இதனால் அவர் இந்த வாரம் வீட்டுக்கு செல்வது உறுதியாகிவிட்டது.