‘துணிவு - வாரிசு’க்கு முன்... 6 முறை நேருக்கு நேர் மோதிய ‘விஜய் - அஜித்’ படங்கள் - அதில் அதிக வெற்றி யாருக்கு?

First Published Jan 6, 2023, 11:15 AM IST

துணிவு - வாரிசு திரைப்படங்கள் பொங்கலுக்கு ரிலீசாக உள்ள நிலையில், இதற்கு முன் அஜித் - விஜய் படங்கள் நேருக்கு நேர் மோதியதில் அதிக வெற்றியை பெற்றது யார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சமகாலத்தில் அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் விஜய் - அஜித். இவர்கள் இருவருக்குமே மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர்களது படங்கள் தனித்தனியாக ரிலீஸ் ஆனாலே திருவிழா போல கொண்டாடும் ரசிகர்கள், தற்போது ஒரே நாளில் ரிலீஸ் ஆனால் சும்மா விடுவார்களா என்ன. தற்போதே இருதரப்பு ரசிகர்களிடையே போட்டி ஆரம்பித்துவிட்டது. இது ஒரு புறம் இருக்க, இதற்கு முன் இவர்களது படங்கள் நேருக்கு நேர் மோதியபோது அதிக வெற்றி யாருக்கு கிடைத்தது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கோயம்புத்தூர் மாப்பிள்ளை - வான்மதி (1996)

முதன்முதலில் மோதிய அஜித் - விஜய் படங்கள் என்றால் அது வான்மதி - கோயம்புத்தூர் மாப்பிள்ளை ஆகிய படங்கள் தான். இவ்விரு படங்களும் கடந்த 1996-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீசானது. இதில் அஜித்தின் வான்மதி படத்துக்கு சுமாரான விமர்சனங்களே கிடைத்தன. மறுபுறம் விஜய்யின் கோயம்புத்தூர் மாப்பிள்ளை அமோக வெற்றிபெற்று பொங்கல் ரேஸில் ஜெயித்தது.

காலமெல்லாம் காத்திருப்பேன் - நேசம் (1997)

1997-ம் ஆண்டு விஜய் - அஜித் படங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. அப்போது விஜய் நடித்த காலமெல்லாம் காத்திருப்பேன் திரைப்படமும், அஜித் நடித்த நேசம் திரைப்படமும் ரிலீஸ் ஆகின. இதில் விஜய்யின் காலமெல்லாம் காத்திருப்பேன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. 30 லட்சத்தில் எடுக்கப்பட்ட இப்படம் 50 லட்சம் வரை வசூல் ஈட்டி சாதனை படைத்தது. ஆனால் இதற்கு போட்டியாக ரிலீசான அஜித்தின் நேசம் திரைப்படம் பிளாப் ஆனது.

பிரண்ட்ஸ் - தீனா (2001)

2001-ம் ஆண்டு பொங்கல் பண்டிகை அஜித் - விஜய் ரசிகர்கள் இருவருக்குமே மறக்கமுடியாத ஒன்றாக அமைந்தது. அந்த ஆண்டு ரிலீஸான விஜய்யின் பிரண்ட்ஸ் மற்றும் அஜித்தின் தீனா ஆகிய இரண்டு திரைப்படங்களும் மெகா ஹிட் ஆகின. இதில் தீனா படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருந்தார். அதேபோல் பிரண்ட்ஸ் படத்தை ஃபாசில் இயக்கி இருந்தார். இந்த இரு படங்களுமே இன்றளவும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆதி - பரமசிவன் (2006)

பிரண்ட்ஸ் - தீனா என இரண்டு வெற்றிப்படங்களுக்கு பின் மோதலை தவிர்த்து வந்த விஜய் - அஜித், 5 ஆண்டு இடைவெளிக்கு பின் பொங்கல் ரேஸில் போட்டி போட்டு வெளியிட்ட படங்கள் தான் ஆதி - பரமசிவன். கடந்த 2006-ம் ஆண்டு ரிலீசான இந்த இரண்டு படங்களுமே பிளாப் ஆகின. இருதரப்பு ரசிகர்களுக்கும் மறக்கக்கூடிய பொங்கலாக இது அமைந்தது.

இதையும் படியுங்கள்... நடிகர் விஜய்யுடன் வாரிசு படத்தில் பணியாற்றிய பிரபலம் மாரடைப்பால் திடீர் மரணம்... சோகத்தில் படக்குழு

போக்கிரி - ஆழ்வார் (2007)

2007-ம் ஆண்டு பொங்கலுக்கு விஜய் நடித்த போக்கிரி திரைப்படமும், அஜித்தின் ஆழ்வார் திரைப்படமும் ரிலீஸ் ஆகின. இதில் பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடித்திருந்த போக்கிரி திரைப்படம் வெற்றிவாகை சூடியது. இதற்கு போட்டியாக ரிலீஸ் ஆன அஜித்தின் ஆழ்வார் படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால் 2007-ம் ஆண்டு போக்கிரி பொங்கலாக அமைந்தது.

வீரம் - ஜில்லா (2014)

விஜய்யும் அஜித்தும் மாஸ் ஹீரோ அந்தஸ்துக்கு உயர்ந்த பின் ஒரே நாளில் ரிலீஸான படங்கள் தான் வீரம் - ஜில்லா. இந்த இரண்டு படங்களும் கடந்த 2014-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆனது. இதில் இரண்டு திரைப்படங்களுமே வசூல் ரீதியாக சக்கைப்போடு போட்டு பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின. இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸீல் ரூ.80 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி இருந்தன.

வாரிசு - துணிவு (2023)

விஜய் - அஜித் படங்கள் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதிக் கொண்டுள்ளன. இதில் அதிக வெற்றிகளை பெற்றது விஜய் தான். அவரது ஆதி படத்தை தவிர மற்ற 5 படங்களுமே வெற்றிப்படங்களாக அமைந்தன. மறுபுறம் அஜித்துக்கு 2 முறை மட்டுமே வெற்றி கிடைத்துள்ளது. இதனால் இந்த முறை நடைபெறும் வாரிசு - துணிவு படங்களுக்கு இடையேயான மோதலில் யார் வெற்றிபெறுவார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த இரு படங்களும் வருகிற ஜனவரி 11-ந் தேதி ரிலீசாக உள்ளது.

இதையும் படியுங்கள்... திலீப் குமார்... அல்லா ரக்கா ரகுமானாக மாறியது ஏன்?... பலருக்கும் தெரிந்திடாத இசைப்புயலின் சுவாரஸ்ய பின்னணி..!

click me!