நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வருகிற ஜனவரி 11-ந் தேதி ரிலீசாக உள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலருக்கு அமோக வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், வாரிசு படத்தில் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றி உள்ள சுனில் பாபுவின் திடீர் மரணம் படக்குழுவை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள மல்லப்பள்ளியை சேர்ந்த சுனில் பாபு, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழி படங்களில் பணியாற்றி உள்ளார். மைசூருவில் கல்லூரிப் படிப்பை முடித்த இவர் பிரபல கலை இயக்குனர் சாபு சிரிலின் உதவியாளராக சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். 100-க்கும் மேற்பட்ட படங்களில் கலை இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார் சுனில் பாபு.