இயக்குனர் ஷங்கரிடம் எந்திரன், நண்பன் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லீ. இவர், கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் அட்லீ. இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனாலும், இது மணிரத்னத்தின் மவுனம் ராகம் படம் போல் உள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன.
இதையடுத்து தெறி படம் மூலம் விஜய்யுடன் கூட்டணி அமைத்தார் அட்லீ. நடிகர் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி மாஸான வெற்றியை ருசித்தது. அட்லீயின் மேக்கிங் ஸ்டைல் விஜய்க்கு மிகவும் பிடித்துப்போனதால், அவருக்கே தனது அடுத்த படமான மெர்சலை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார்.
இப்படத்தில் நடிகர் விஜய் ட்ரிபிள் ஆக்ஷனில் கலக்கி இருந்தார். இப்படமும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் பார்த்தது. இதன்மூலம் விஜய்யின் பேவரைட் இயக்குனராக மாறினார் அட்லீ. இதையடுத்து இவர்கள் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்த பிகில் படம் கடந்த 2019-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி பட்டிதொட்டி எங்கும் பட்டைய கிளப்பியது.
இதில் ராயப்பன், மைக்கேல் என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் விஜய். அதிலும் குறிப்பாக அவர் நடித்த ராயப்பன் கதாபாத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், அமேசான் ஓடிடி தளத்தின் டுவிட்டர் பக்கத்தில், பிகில் ராயப்பன் புகைப்படத்தை பகிர்ந்து, ராயப்பன் கதையை மட்டும் வைத்து ஒரு முழு படம் உருவானால் எப்படி இருக்கும்னு நெனச்சு பாருங்க என பதிவிட்டிருந்தனர். இதைப்பார்த்த இயக்குனர் அட்லீ, செஞ்சிட்டா போச்சு என அதற்கு பதிலளித்துள்ளார்.