நடிகர் அஜித் குமார், கார் ரேஸில் கலந்துகொள்வதற்காக மலேசியா சென்றுள்ள நிலையில், அங்கு அவரைக் காண ரசிகர்கள் ஏராளமானோர் படையெடுத்து வந்துள்ளனர். அவர்களுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்துள்ளார் ஏகே.
தமிழ் சினிமாவில் எந்தவித பின்புலமும் இன்றி தன்னுடைய சொந்த உழைப்பால் முன்னுக்கு வந்தவர் தான் நடிகர் அஜித் குமார். இவருக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்ல, அஜித் உலகளவில் எங்கு சென்றாலும் அவரைக் காண அங்கு ரசிகர்கள் படையெடுத்து வந்துவிடுவார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது மலேசியாவில் அரங்கேறி இருக்கிறது. நடிகர் அஜித் கார் ரேஸில் பங்கேற்க மலேசியா சென்றுள்ளார்.
24
ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்த அஜித்
மலேசியாவில் உள்ள செபாங்கில் நடைபெற்ற கார் பந்தயத்தில் அஜித்தின் ரேஸிங் அணி பங்கேற்றது. அப்போது அஜித்தைக் காண அங்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்தனர். ரேஸ் முடிந்த பின்னர் அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் அஜித். அவரைக் காணவும், அவருடன் போட்டோ எடுக்கவும் ஏராளமானோர் திரண்டதால் அந்த இடமே சிறிது நேரத்தில் பரபரப்பானது. ஆனால் அஜித் அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக கூட்டத்தின் நடுவே நின்றபடி ஒரு செல்ஃபி எடுத்திருக்கிறார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
34
க்யூவில் நின்ற ரசிகர்கள்
அதுமட்டுமின்றி நேற்று இரவு அஜித்தை காண 500க்கும் மேற்பட்ட ரசிகர்கள் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். அதுகுறித்து அறிந்ததும், அவர்களை வரிசையில் வர வைத்து, ஒவ்வொருவருடனும் தனித்தனியாக புகைப்படம் எடுத்திருக்கிறார் அஜித். அவருடன் போட்டோ எடுக்க மிகப்பெரிய க்யூவில் ரசிகர்கள் நின்ற வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன. அதில் அஜித்துடன் கடைசியாக போட்டோ எடுத்த பெண் ஒருவர் போட்டுள்ள பதிவில், நான் கடைசியாக போட்டோ எடுத்தபோது அவர் ரொம்ப டயர்டாக இருந்தாலும் இன்முகத்தோடு என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார் என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு முதல் உலகளவில் நடைபெற்று வரும் கார் பந்தயங்களில் தன்னுடைய அணியினருடன் பங்கேற்று வரும் அஜித். இந்த விளையாட்டை இந்தியாவில் பிரபலப்படுத்துவதே தனது குறிக்கோள் என கூறி இருக்கிறார். மலேசியாவில் கார் ரேஸ் பார்க்க ஏராளமான ரசிகர்கள் வந்திருந்ததை பார்த்து நெகிழ்ந்து போன அஜித், அவர் இந்த விளையாட்டுக்கு கொடுக்கும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். சுமார் 23 ஆண்டுகளுக்கு பின் அவர் மலேசியா சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.