ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ், ஹாலிவுட்டின் புகழ்பெற்ற ஸ்டுடியோவான வார்னர் பிரதர்ஸை கையகப்படுத்த உள்ளது. இதற்காக 7.45 லட்சம் கோடி செலவு செய்திருக்கிறதாம் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம்.
ஹாலிவுட்டின் புகழ்பெற்ற ஸ்டுடியோவான வார்னர் பிரதர்ஸை (வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி) ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் கையகப்படுத்த உள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, வார்னர் பிரதர்ஸின் சினிமா, தொலைக்காட்சி ஸ்டுடியோக்கள் மற்றும் எச்பிஓ, எச்பிஓ மேக்ஸ் போன்ற சேனல்கள் நெட்ஃபிளிக்ஸின் ஒரு பகுதியாக மாறும். பணம் மற்றும் பங்குகள் வடிவில் இந்த பரிமாற்றம் நடைபெறும். இதன் மதிப்பு 82.7 பில்லியன் டாலர்கள் (சுமார் 7.45 லட்சம் கோடி ரூபாய்). அடுத்த ஆண்டு மத்தியில் இந்த கையகப்படுத்தல் நிறைவடையும்போது, வார்னர் பிரதர்ஸின் உலகப் புகழ்பெற்ற திரைப்படங்கள் மற்றும் சீரிஸ்கள் அனைத்தும் நெட்ஃபிளிக்ஸில் கிடைக்கும்.
24
நெட்ஃபிளிக்ஸில் வார்னர் பிரதர்ஸ் படங்கள்
வார்னர் பிரதர்ஸின் புகழ்பெற்ற சீரிஸ்களான 'தி பிக் பேங் தியரி', 'தி சொப்ரானோஸ்', 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' மற்றும் 'தி விசார்ட் ஆஃப் ஓஸ்' போன்ற திரைப்படங்களை நெட்ஃபிளிக்ஸில் பார்க்கும் வாய்ப்பு இதன் மூலம் உருவாகியுள்ளது. இந்த கையகப்படுத்தல் நிறுவனத்தின் படைப்புத்திறன் சார்ந்த இலக்குகளை வலுப்படுத்தும் என்று நெட்ஃபிளிக்ஸ் இணை-சிஇஓ டெட் சரண்டோஸ் கூறியுள்ளார்.
34
நெட்ஃபிளிக்ஸுக்கு அதிகரிக்கும் மவுசு
“உலகத்தை மகிழ்விப்பதே எங்களின் நோக்கம். 'காசாபிளாங்கா', 'சிட்டிசன் கேன்' போன்ற கிளாசிக் படங்கள் முதல் 'ஹாரி பாட்டர்', 'ஃப்ரெண்ட்ஸ்' போன்ற நவீன கால விருப்பங்கள் வரை வார்னர் பிரதர்ஸின் பிரம்மாண்டமான தொகுப்பு, எங்களின் 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்', 'டீமன் ஹண்டர்ஸ்', 'ஸ்க்விட் கேம்' போன்ற படைப்புகளுடன் சேரும்போது, எங்களால் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும். பார்வையாளர்கள் விரும்புவதை அதிகமாக வழங்கவும், அடுத்த நூற்றாண்டின் கதைசொல்லலை வடிவமைக்கவும் இந்த இணைப்பு உதவும்” என்று டெட் சரண்டோஸ் தனது அறிக்கையில் தெரிவித்தார்.
புதிய ஒப்பந்தத்தின்படி, வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரியின் பங்குதாரர்களுக்கு ஒரு பங்குக்கு 27.75 டாலர்கள் கிடைக்கும். இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்போது, உலகளாவிய பொழுதுபோக்குத் துறையில் நெட்ஃபிளிக்ஸின் ஆதிக்கம் மேலும் அதிகரிக்கும். நிறுவனத்தின் வளர்ச்சியின் அடுத்த கட்டமாக, நியூ ஜெர்சியில் 350 மில்லியன் டாலர் செலவில் ஒரு புதிய ஸ்டுடியோ வளாகத்தையும் நெட்ஃபிளிக்ஸ் உருவாக்கி வருகிறது. இதன் கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.