அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் கடந்த ஜனவரி 11ந் தேதி பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. எச்.வினோத் இயக்கத்தில் வெளியான இப்படம் வங்கிக் கொள்ளையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. இப்படத்தில் அஜித்துடன் மலையாள நடிகை மஞ்சு வாரியரும் ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டி இருந்தார். இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
இந்நிலையில், தற்போது மேலும் ஒரு அஜித் ரசிகர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடியை சேர்ந்தவர் வீரபாகு. தீவிர அஜித் ரசிகரான இவர், துணிவு படம் பார்க்க தனது குடும்பத்தினருடன் தியேட்டருக்கு சென்றுள்ளார். அப்போது வீரபாகு மது அருந்திவிட்டு வந்ததால் அவரை தியேட்டர் ஊழியர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை.
அதுமட்டுமின்றி குடும்பத்தினர் முன்னிலையில், அவரை தரக்குறைவாக பேசியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் வீரபாகுவை தவிர்த்து அவரது குடும்பத்தினரை மட்டும் தியேட்டரில் படம் பார்க்க அனுமதித்துள்ளனர். இதனால் மனமுடைந்து போன வீரபாகு, வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.