தமிழ் சினிமாவில் இன்று நடிப்பின் நாயகனாக வலம் வந்துகொண்டிருப்பவர் சூர்யா. அவர் இந்த அளவுக்கு தலைசிறந்த நடிகராக உருவெடுக்க முக்கிய காரணமாக இருந்த இயக்குனர் என்றால் அது பாலா தான். இவர் பாலா இயக்கத்தில் நடித்த நந்தா மற்றும் பிதாமகன் ஆகிய இரு படங்கள் தான் சூர்யாவை ஒரு தரமான நடிகராக்கியது. சூர்யாவின் கெரியரில் திருப்புமுனையை ஏற்படுத்தியதும் இந்த இரண்டு படங்கள் தான்.
இதனால் சூர்யா - பாலா இடையே நெருங்கிய நட்பும் உருவானது. இதன் காரணமாக தான் பாலா இயக்கத்தில் ஆர்யா - விஷால் நடித்த அவன் இவன் படத்தில் கூட நடிகர் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார். நந்தா, பிதாமகன் படத்துக்கு பின்னர் சூர்யாவும், பாலாவும் இணைந்து பணியாற்றாமல் இருந்து வந்தனர்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு அவர்கள் இருவரும் வணங்கான் என்கிற படத்தின் மூலம் 18 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
இப்படத்தின் ஷூட்டிங் கடந்த மார்ச் மாதம் கன்னியாகுமரியில் தொடங்கியது. அங்கு வணங்கான் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை ஒருமாதம் நடத்தினர். அப்போது நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு அதன்பின் நடக்கவே இல்லை. படத்தின் கதையில் சில மாற்றங்களை பாலா செய்து வருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியானது.
இதையும் படியுங்கள்... விஜய்யின் வாரிசு படத்திற்கு பாட்டு பாட சிம்பு கேட்ட சம்பளம் எவ்வளவு? வெளியான ஆச்சர்ய தகவல்
ஆனால் அந்த மாற்றங்கள் சூர்யாவுக்கு செட் ஆகாது என்பதால் அவரை இப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அறிவுறுத்தியதாகவும், அதனால் சூர்யா இப்படத்திலிருந்து விலகிவிட்டதாகவும் நேற்று முன்தினம் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார் பாலா. இருப்பினும் வணங்கான் படத்தின் பணிகள் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.