
திரைப்படங்களில் ஜொலிக்கும் நடிகைகளின் சிரிப்புக்கு பின்னால் பல சோக கதைகள் உள்ளன. ராஜபோக வாழ்க்கை வாழ்ந்து, இறுதியில் ஏமாற்றங்களால் பல கஷ்டங்களுக்கு ஆளான நடிகைகள் பலர் உள்ளனர். அவர்களில் ஸ்ரீவித்யாவும் ஒருவர். ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரீவித்யா, பின்னர் கதாநாயகியாக நடிப்பதை நிறுத்திவிட்டு குணச்சித்திர வேடங்களில் நடிக்க துவங்கினார். பல முன்னணி நடிகர்களுக்கு அம்மா, அக்கா, மாமியார் என வெயிட்டான கதாபாத்திரங்களில் நடித்தார்.
திரைப்படங்களில் புகழின் உச்சத்தில் இருந்த ஸ்ரீவித்யா தனது வாழ்க்கையில் அனுபவித்த கஷ்டங்களும், சிந்திய கண்ணீரும் கொஞ்சம் நஞ்சம் அல்ல. கதாநாயகியாக தென்னிந்திய திரைப்படத் துறையை ஆண்ட ஸ்ரீவித்யா, முடிவில்லாத கண்ணீரில் மூழ்கித் தவித்தார். காதலனுக்காக மதம் மாறி திருமணம் செய்து கொண்ட ஸ்ரீவித்யா காதல் கணவராலேயே பல கொடுமைகளை சந்திக்க நேர்ந்தது.
கே. பாலச்சந்தர் இயக்கிய ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் ரஜினிகாந்த் (Rajinikanth) , கமல்ஹாசனுடன் (Kamalhaasan) இணைந்து நடித்த ஸ்ரீவித்யா, கமல்ஹாசனுடன் அதிக படங்களில் நடித்ததால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறியது. இருவரும் தீவிரமாக காதலித்தனர். திருமணம் செய்து கொள்ளவும் நினைத்தனர். ஆனால் ஸ்ரீவித்யாவின் தாய் இந்த திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. ஸ்ரீவித்தியாவும் அந்த சமயத்தில் கமல் பேச்சை உதாசீனம் செய்ததால், அவரிடம் இருந்தே உடனடியாக பிரேக்அப் செய்த கமல் பரத நாட்டிய கலைஞர் வாணி கணபதியை திருமணம் செய்தார்.
கமலின் காதல் பிரிவால் சில வருடங்கள் வாடிய ஸ்ரீவித்தியா, பின்னர் 1978 இல் மலையாள இயக்குனர் ஜார்ஜ் தாமஸை (George Thomas) திருமணம் செய்து கொண்டார். சொர்க்கமாக அமையும் என எண்ணி திருமண வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்தார். ஆனால் கணவனால் அவரின் வாழ்க்கை நரகமாக மாறியது. திருமணத்திற்குப் பிறகு கணவர் சொன்னதால் ஸ்ரீவித்யா படங்களில் நடிப்பதை நிறுத்த வேண்டியதாயிற்று. அவரது சொத்துக்கள் அனைத்தையும் கணவர் அபகரித்துக் கொண்டார். அதன் பிறகு அவரை துன்புறுத்த ஆரம்பித்தார். கருத்து வேறுபாடுகள் அதிகரித்ததால் 1980ல் விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்தனர்.
அதீத திறமை.. உச்சகட்ட புகழ்.. ஆனால் குடிப்பழக்கத்தால் வாழ்க்கையை தொலைத்த நடிகைகள்!
கணவனிடம் சொத்துக்கள் மொத்தத்தையும் இழந்த ஸ்ரீவித்யா விவாகரத்துக்குப் பிறகு பொருளாதாரப் பிரச்சனைகளை சந்திக்க துவங்கினார். இதன் பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கிய நிலையில், தன்னை விட மூத்த நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து ஆச்சர்யப்படுத்தினார்.
குணச்சித்திர நடிகையாக ஸ்ரீவித்யா தொடர்ந்து 20 வருடங்களுக்கு மேல் நடித்தார். இவரை தங்களின் படங்களில் நடிக்க வைக்க பலர் ஆர்வம் காட்டினர். அதே சமயம் ஸ்ரீவித்யாவின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாக துவங்கியது.
ஸ்ரீவித்யாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதை உறுதி செய்தனர். ஸ்ரீவித்யா 2003 ஆம் ஆண்டு உயிர் இழக்கும் முன் தனது சொத்துக்கள் அனைத்தையும் இசை, நடனக் கல்லூரிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு நன்கொடையாக வழங்கினார். ஒரு அறக்கட்டளையை உருவாக்கி, முன்னணி நடிகர் நடிகைகளிடம் நன்கொடைகளை வசூலித்து ஏழை மாணவர்களுக்கு வழங்கினார். தன்னுடைய வீட்டில் பணியாற்றியவர்களுக்கும் மீத சொத்துக்களை பகிர்ந்து கொடுத்தார். புற்றுநோய் வலியால் துடித்து கொண்டிருந்த ஸ்ரீவித்யா (SriVidya) 2006ல் 53 வயதில் ஸ்ரீவித்யா காலமானார்.
புற்றுநோய் பாதிப்புக்கு பின்னர் யாரையுமே தன்னை பார்க்க அனுமதிக்காத ஸ்ரீவித்யா கடைசியாக உலக நாயகன் கமல்ஹாசனை மட்டுமே சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கடைசி வரை கமலின் காதல் அவர் மனதில் இருந்தததாக கூறப்படுகிறது.