தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த சினேகா, திருமணமாகி குழந்தை பெற்ற பின்னரும் கூட ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தைப் பிடித்துள்ளார். சூர்யா - ஜோதிகா, அஜித் - ஷாலினிக்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்களால் ரசிக்கப்படும் காதல் தம்பதி என்றால் அது சினேகா - பிரசன்னா ஜோடி தான்.
கடந்த 2009-ம் ஆண்டு வெளியான “அச்சமுண்டு அச்சமுண்டு “ என்கிற படத்தில் நடித்தபோது நடிகர் பிரசன்னாவுக்கும் நடிகை சினேகாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் திரையுலகினர் புடைசூழ இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.
2015-ம் ஆண்டு இவர்களுக்கு விஹான் என்ற மகன் பிறந்தார். இதன் பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்த நடிகை சினேகா, சிவகர்த்திகேயனின் வேலைக்காரன் படம் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்தார்.
இந்த படத்தில் சவாலான வேடத்தில் திறம்பட நடித்து பாராட்டுக்களை பெற்ற நடிகை சினேகாவிற்கு இதன்பின், சில பட வாய்ப்புகளும் கிடைத்தன. ஆனால் அந்த சமயத்தில் அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமானதால் மீண்டும் சினிமாவிற்கு ரெஸ்ட் விட்டார்.
குழந்தை பிறந்த பின்னர் உடல் எடை அதிகரித்து காணப்பட்ட சினேகா, தற்போது கடுமையான உடற்பயிற்சி மூலம் உடல் எடையை வெகுவாக குறைத்து ஸ்லிம் லுக்கிற்கு மாறி உள்ளார்.
தற்போது மீண்டும் திரையுலகில் கவனம் செலுத்த துவங்கியுள்ள சினேகா ஷா... பூ.. திரி என்கிற படத்தில் வெங்கட் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.